Friday, March 14, 2008

உன்னால் முடியும் தம்பி

பெரிய பிரச்சினைகளிலெல்லாம்
சிறியதாக மூக்கை நுழைத்து,
சந்தோஷமாய் வாலை ஆட்டி,
சரியான சொற்களால் சுரண்டி,
நேரச் சிரிப்பில் கீச்சிட்டு,
வலைகளில் மாட்டாமல்,
பொறிகளை பொருட்படுத்தாமல்,
மூலையை எட்டிப் பார்க்கும்,
மூளைக் குழந்தை இவன்.

குழந்தையென உனக்கு
பெயரிட்டது பொருத்தம்தான்.
வளர்ந்து கொண்டேயிருக்கிறாய்.
ஈன்றபோது கூட பெரிதுவக்காதவள்
மௌனமாய் உன் வளர்ச்சியை ரசிக்கிறாள்.

விரல்களை பிடித்து நடந்த நீ
சிலருக்கு வழிகாட்டுகிறாய்.

தாழ்வு மனப்பான்மையோ என
தாழ்த்தியவர்கள்
உன் உயரத்தை பார்க்கிறார்கள்.

வேகம் இல்லையோ என்றவர்கள்
தூரமாய் நின்று
உன் விவேகத்தை பாராட்டுகிறார்கள்.

முப்பது நாள் விடுமுறையில்
மூன்று பக்கங்களே படித்தவன்
முந்நூறு நாட்களில்
முன்னேறிவிட்டானே என
மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

உன் முடிவில்லாத முயற்சியில்
உன் மூக்கையே சிறிதாய் வளைந்திருக்கிறாய்.

பணம் எண்ணுவதிலிருக்கும்
நேர்த்தியை போலவே
மனம் எண்ணுவதிலும்
தேர்ச்சியாயிருக்கிறாய்.


அதோ பாரு ஏரோப்ளேன் என்று
உன்னை தூக்கி காட்டிய தாயை
இதுதான் ஏரோப்ளேன் என்று
அவளுடனே பயணித்து
விமானத்தை போலவே
விண்ணிலே பறந்திருக்கிறாய்.

நடந்து செல்கிறவன் தானே
இவன்.
இன்று என்ன புதிதாய்
பயணத்திற்கு தயாராகிறான்?

நடை பயணிகளுக்கு
இவன் நடத்தையில் சந்தேகம்.

இரயில் நிலையத்தில்
பயணச்சீட்டோடு இருந்தாலும்
பயணிக்க நினைத்ததால்
பிடிபட்டான் ஒரு நாள்.

நட்பு என்பது
தண்டவாளங்கள் தானடா,
வலுப்பெறலாமே தவிர
ஒன்று சேர முடியாது.
தூரத்திலிருந்து பார்ப்பதற்கு
சேர்ந்திருப்பது போல் தான்
தெரியும் என்கிறான்.

காதல் என்பது
பயணம் தானடா,
பாதை என்று நீ தவறாய்
புரிந்துகொண்டிருக்கிறாய்என்று நாம் கூற
புன்னகையோடு
பயணத்திற்கு இரயிலேறுகிறான்.

தண்டவாளத்தில் காதை வைத்து,
உளவு பார்த்தால்
தூரத்தில் சேர்ந்திருக்கும்
தண்டவாளங்களின்
வண்டவாளங்களை
அதிர்வாய் உணர முடிகிறது.

இரயில் மறைந்தாலும்
எங்களுக்குள் புகை.

சத்தமும் அதிர்வும்
நித்தமும் கேட்கிறது.

நிறுத்தநிலையத்தில்
நாங்கள்
பச்சைக்கொடி காட்டும் போதெல்லாம்
சிவப்புக்கொடி காட்டி
நிறுத்த சொல்கிறான்.
அவனை அல்ல.
எங்களை.

சில நேரங்களில்
நாங்களெல்லாம்
பச்சைக்கொடியா
நிலக்கரியா என்று கூட
சந்தேகம் வந்திருக்கிறது.

சேருமிடத்திற்கு
சென்று சேரட்டும்...
சேர்ந்த இடத்தை வைத்து
தெரிந்து கொள்ளலாம்,
பயணமா? பாதையா? என்று.

சேரும் இடம்,
சேர்ந்திருக்கும் மாநிலம் என்றால்
அது பயணமே!

திரும்பி வந்தான் என்றால்
அது பாதையே!

யாருக்கு தெரியும்.
பாதை சரியில்லையென்று
பயணத்தை நிறுத்திவிட்டு
பாதியிலே கூட வந்திருக்கலாம்!!

பொறுத்திருங்கள்.......
இப்போது
பயணித்திருக்கிறான்.
இப்போதும்
பயணிக்கிறான்!!

No comments: