அந்த ஒரு நிமிடம்
காலை நேரம்.
கடற்கரை இடம்.
காதலர் கூடம்.
கடலோரம் அமர்ந்திருந்து
காதலிக்காக காத்திருந்தேன்.
காதலியோடு இருக்கும்
அந்த நிமிடத்தை எதிர்பார்த்திருந்தேன்.
வானத்து எல்லையிலிருந்து
இருபுறம் மட்டும்
பரவியிருந்தது கடல்.
எல்லா புறமும்
பரவியிருந்தது காதல்.
அலைகளெல்லாம்
அருகில் வந்து
அவள் வருவாள் வருவாளென்று
கால்களை வருடி
காலத்தை மறக்கச் செய்தது.
சூழலில் தோன்றும்
வெறுமையை உணர்ந்து
மனதில் அவளை எண்ணிக்கொண்டு
மணலை எண்ணிக்கொண்டிருந்தேன்.
சேகரித்த மணல்
சுவராக மாறியது.
தூரத்திலிருக்கும் படகு
கப்பலாகிப் போனது.
காத்திருப்பதை பார்த்து
கதிரவனுக்கே சூடேறிப் போனது.
என் நிழலே
என்னை சுற்றிப் பார்த்தது.
தொலைவிலிருக்கும் கப்பலும்
தூரத்திலிருக்கும் அவளும்
கரைக்கு வரவேண்டுமென்று
காத்திருந்தேன்.
சுண்டல் விற்க வந்த சிறுவன்.
"வேண்டுமா?" என்றான்.
வேண்டும், ஆனால் அவள் என்றேன்.
நான் வாங்கவில்லையென்றாலும்
நண்பகலுக்குள் விற்றுவிடுமென்று
நம்பிக்கை ஊட்டினேன்.
பொதி போல சுமப்பவனை பார்த்து
பாவம் என்றது என் இரக்க குணம்.
கடலை பார்க்க வந்து
காதலை ரசிப்பவர்களுக்கு
மத்தியில் - உண்மையில்
ஓரத்தில் -
காதலை பார்க்க வந்து
கடலை ரசிக்கும் நான்.
என்னையே அறியாமல்
என்னை சுற்றி பார்க்கிறேன்.
என்னை யாரும் பார்க்கிறார்களா என்று.
எவரும் எவரையும் பார்ப்பது
எவருக்கும் தெரியாமல் பார்க்கிறார்கள்.
அவர்களோடு
அவர்களுக்கே தெரியாமல் சேர்ந்துகொள்கிறேன்.
கடற்கரையின் தூரத்தை
கால்களால் கடக்கும் சிலர்.
காரணம் தெரியாமல்
ஆறறிவுக்கு அருகில்
கயிறுக்கு கட்டுப்பட்டு ஓடும்
ஐந்தறிவுகள் சில.
கடலை பார்க்க சிலர்.
கடலை ரசிக்க சிலர்.
காதலியை பார்க்க சிலர்.
காதலனை பார்க்க சிலர்.
காதலை பார்க்க சிலர்.
விளையாட சிலர்.
விளையாட்டாய் காதலிக்க சிலர்.
காதலை விளையாட்டாக்க சிலர்.
குழந்தைகள் சில.
குழந்தையாய் சில.
குழந்தைதனமாய் சில.
அவர்கள் மணல் - நிலையில்
என் மனநிலையில்
யோசிக்கிறேன்.
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதம்.
அவள் கூறியதும்
அவன் கேட்டதும்
அவனிடம் மட்டுமல்ல.
அவளிடம் மட்டுமல்ல.
அவள் கூறியதும்
அவளிடம் கூறியதும்
அவள் அருகிலிருக்கும்வரை.
அவர்களுக்குள் பேசியது -
சிலருக்கு
அங்கிருந்து எழும்வரை.
சிலருக்கு
எழுந்து நின்று மணல் தட்டும் வரை.
சிலருக்கு
அலைச்சத்தம் கேட்கும்வரை.
சிலருக்கு
கடல்காற்று வீசுமிடம் வரை.
சிலருக்கு
வீட்டுக்குள் செல்லும்வரை.
சிலருக்கு மட்டும்
அலை இருக்கும்வரை...
கற்பனையை கலைத்து -
எதிர்காலத்தை சொல்வேனென்று
எதிரே வந்து நின்றாள் ஒருத்தி.
நூறாயுசு உனக்கு என்றாள்.
நன்றி -
உன் எதிர்காலம்
உனக்கு தெரியுமா?
எகத்தாளமாய் கேட்டேன்.
அதோ
அவள் வருகிறாளென்று
அலை ஒன்று
எல்லை தாண்டி சந்தோஷித்தது.
காத்திருந்து பார்த்த காலத்தைவிட
பார்த்த பிறகு காத்திருந்த காலம்
பெரிதாயிருந்த்தது.
எல்லாம் மறக்கிறேன்.
எதிரில் நடப்பதறியாமல்
எழுகிறேன்.
எதிரில் எழுவதறியாமல்
நடக்கிறேன்.
நெருங்கிவிட்டாள்.
நெருங்கிவிட்டோம்.
ஏன் தாமதம்
என கேட்க நினைத்ததுதான்
தாமதம்.
மன்னித்துவிடு என்றாள்.
மறந்தேவிட்டேன் என்றேன்.
இதுதான் காதலோ?
சந்தோஷத்தில்
அலைச்சத்தம் அதிகமானது.
அங்கிருப்பவர்களின்
சத்தமும் அதிகமானது.
சுற்றத்தை மறந்து
கட்டிக் கொள்கிறோம்.
"கடவுள் வந்தால் வரம் கேட்பேன்.
கணம் இறக்க வேண்டுமென்று கேட்பேன்"
என்றாள்.
சிரித்துக்கொண்டு
செல்லமாய் கன்னத்தில் அறைகிறேன்.
எங்களையே
ஏதோ அறைந்தது போலிருந்தது.
அவள் தான் வந்துவிட்டாளேயென்று
அலை கொஞ்சம்
அதிகமாகவே வந்துவிட்டது.
பேரிரைச்சல்.
பெரும் கூச்சல்.
மூச்சிரைச்சல்.
அமர்ந்திருந்த நாங்கள்
அமைதியாய் மிதக்கிறோம்,
கட்டி அணைத்தபடியே.
எனதருகே,
என்னைப்போலவே,
கரைசேர்ந்த கப்பல்,
கயிறு விடுபட்ட ஐந்தறிவு,
பாரம் சுமக்காமல் சிறுவன்,
காலியான சிறுவனின் பாத்திரம்,
எதிர்காலம் சொல்ல வந்தவள்,
வரம் கிடைத்த காதலி.
அந்த ஒரு நிமிடம்.
நினைத்தது எல்லாமே
நடந்திருக்கிறது.
நினைக்காத வகையில்.
இருவரையும் அள்ளி
இறுதிச்சடங்கு செய்துவிட்டு
ஆவியாகி
கூடுவிட்டு கூடுபாய்ந்துகொள்கிறது
காதல்...,
அந்த ஒரு நிமிடம்.
Subscribe to:
Posts (Atom)