தெரிந்துகொள் தெய்வமே..,



தெரிந்துகொள் தெய்வமே..,




வேறு எங்காவது இருந்துகொண்டு
வேண்டாத செயல் செய்யும்போது
வேவு பார்க்காமலிருக்கத்தான்
உனக்கென்று தனி கோவில்..,


உனைப் பார்க்க வந்ததாய் சொல்லி
உனை பார்க்க வந்தவர்களை - பார்க்கும்
ஊனமுற்ற மனங்களை - நீ
உறுத்தலோடு பார்க்காமலிருக்கத்தான்
உன் இருப்பிடம் இருட்டறை..,


சுமந்து வரும் வேண்டுதல்கள்,
சயனத்தில் நீ இருந்தால் - உன்
செவிகளில் விழாமல்
சென்றுவிடுமோ என்று ,
உனை விழிக்க வைப்பதற்குத்தான்
உன் கோவிலில் மணி..,


மனதில் அழுக்கை வைத்துக்கொண்டு
வாழ்க்கையை சுத்தமாக்க , வேண்டும் சிலரால் ,
கோபமான உன்னை
குளிர்ச்சிப்படுத்தத்தான்
உனக்கு அபிஷேகம்..,


வழக்கு மொழியை உனக்கு கற்பித்தால்
எங்களுக்குள் பேசுவதை
புரிந்துகொள்வாயோ என்றுதான்
வழக்கில் இல்லாத மொழியில்
உனக்கு சொல்லும் மந்திரம்..,


மன அறையை மறைத்து
வேண்டுபவர்களின் உள்ளத்தை
கருவறையில் அமர்ந்தாலும்,
வெளிச்சத்தில் ஒருமுறை பார்க்கத்தான்,
உனக்கு தீபாராதனை..,


மனதை கைகளால் தீவிரமாய் மறைத்து
மனதை படித்திருப்பாயோ என்ற பயத்தில்
உனை பார்க்க கூச்சப்பட்டு
கண்களை மூடி வேண்டுவதால்தான்
உனக்கு அவன் தீவிரபக்தன்..,



காணிக்கை செய்யும்போது - நீ
ஏற்கனவே கொடுத்தது
எவ்வளவு இருக்கிறதென்று
கண்கள் கணக்குசெய்துகொள்ளத்தான்
உனக்கு முன் உண்டியல்..,


உனக்கென்று சொல்லிவிட்டு
உன் முன்னே வைத்துவிட்டு
முடிந்தவரை பங்கு போட்டு தின்று விட்டு
கைதட்டி விட்டு செல்லும்
முதலாளித்துவம் - புரிந்துகொள்ளத்தான்
உன் கோவிலில் பிரசாதம்..,


நூறு வேண்டுதல்களோடு வந்தவன்
அடுத்த முறை வரும்போது
"அவன்தான் இவன்" என
அடையாளம் காணத்தான்
உன் கோவிலுக்குள் திருநீறு..,


உழைக்க முடியுமா இவனால்.
ஒழுங்காய் இருக்கிறதா உடல்.
ஒருமுறை சோதித்து பார்த்துக்கொள்ளத்தான்
உன்னைச் சுற்றி மூன்றுமுறை வலம்..,


தெரிந்துகொள் தெய்வமே..,
..,


இந்தமுறை,
பதினோரு சுற்றல்களை
பட்டியலிட்டுருக்கிறேன்.


அடுத்தமுறை,
நூற்றெட்டு சுற்றல்களோடு
நிச்சயம் வருகிறேன்..,


என் வேண்டுதல்களை
நீ நிறைவேற்றினால்!!!


- தீவிரபக்தன்