உண்மையாய்..,

உண்மையாய்..,

ஆட்டத்தில் சேர்க்கப்படாமல்
ஓரமாய் அமர்ந்துகொண்டு
உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருக்கும்போது
தன்னை நோக்கி வரும் பந்தை பிடித்து
ஆடுகளத்தை நோக்கி எறிந்துவிட்டு
அதே இடத்தில் அமந்துகொள்ளும் சிறுவன்.

வாசலில் அமர்ந்துகொண்டிருப்பவனை பார்த்து
வாகனத்தை நிறுத்திவிட்டு
வித விதமாய் பேசி சிரித்துவிட்டு
வீட்டுக்குள் கூப்பிடமாட்டியா என்று கேட்டபோது
வீட்டுக்குள் பெற்றவர்களின் சண்டைச் சத்தம் கேட்க
அப்புறமா பாத்துகலாம்டா என்று சொல்லி
அனுப்பிவைக்கும் நண்பன்.

கல்விச் சுற்றுலாவுக்கு வராதவனிடம்
காரணம் கேட்டதற்கு
காசு இல்லை என்று சொல்லிவிட்டு
புகைப்படம் நிறைய எடுத்துவா
பார்க்கவேண்டும் என்ற மாணவன்.

காதல் தோல்வியில் - அகாலமாய்
இறந்துவிட்ட மகனின் கவலைகளை
மறப்பதற்காக - வாசலில்
மிதிவண்டியை சுத்தப்படுத்துவதாய் அமர்ந்து
சக்கரத்தை சுத்திக் கொண்டேயிருக்கும் தகப்பன்.

கடைக்கு சென்று
காய்கறி வாங்க நிற்கும்போது
அருகில் வந்து நின்று
மிட்டாய் எவ்வளவென்று கேட்டு
காசு பத்தாமல்
கையிலிருக்கும் காசுகளை பார்த்துக்கொண்டே
திரும்பி போகும் குழந்தை.

தன் காதலி திருமணத்திற்கு வந்து
தாம்பூலத்தில் தாலியை தொட்டு வணங்கி
மேடையில் பொய்யாய் சிரித்து
சாப்பிடும்போது பாதியில் எழுந்து
முகம் கழுவி விட்டு வருவதாய் சென்று
கண்ணீரில் கழுவிவிட்டு திரும்பி
சுற்றம் பார்த்து சிரிக்கும் காதலன்.

காலமான கணவனை நினைத்து
கதறி கதறி அழுது ஓய்ந்துவிட்டு
காலம் ஆன பின் ஒருநாள்
கண்ணீர் விட்டு அழுத சுவடோடு
கண் அயர்ந்து தூங்கும் மனைவி.

ஆள்நடமாட்டமில்லாத
ஆழ்ந்த காட்டுச் சாலையில்
வாகனங்களுக்கு வழிசொல்லும்போது
பழம் வேணுமா என்று கேட்டு
வேண்டாமென விரைந்து செல்லும்
வாகனங்களை விடுத்து
வரும்பாதையை திரும்ப பார்க்கும் பாட்டி.

புகைவண்டியில்
புதுமனைவியை வழியனுப்பிவைத்து
மறையும் வரை கையசைத்து
மறைந்தவுடன்
மறைவாய் கண்துடைத்து
கைபேசியில் பேசிச் செல்லும் கணவன்.

தகப்பனின் சடலத்தை சுமந்து
தகனம் செய்துவிட்டு
நினைவுகளை சுமந்து திரும்பி
சில மணி நேரத்திற்கு பிறகு
சொந்தங்களோடு பேசும்போது எதற்காகவோ
சின்னதாய் சிரிக்கும் மகன்.

பொதுமருத்துவமனைக்குள்
பொறுமையாய் தள்ளாடி வரும்
பெரியவரைப் பார்த்து
தனியாய் ஏன் வருகிறாய்,
மகன்கள் எங்கே என்று கேட்டதற்கு
அதை கேட்காதே
அவர்களால் தான் தனியே வருகிறேன் என்று
அலட்டாமல் சொல்லும் முதியவர்.

ரசிக்கப்படும் என்ற நம்பிக்கையில்
ரசித்து வரைந்த ஓவியத்தை,
விற்றுவிடும் என்ற நம்பிக்கையில்
விழாவில் வைத்த ஓவியத்தை - சுமந்து
வீடு திரும்பும் ஓவியன்.

உண்மையாய்
வருத்தப்பட்ட விஷயங்கள் என
வரிசைப்படுத்த ஆசைப்பட்டபோது
இப்படி -
மற்றவர்களுக்காக
மனம்
வருத்தப்பட்டவைதான்
வருகிறது முதலில்.

எனக்காக வருத்தப்பட்ட
எல்லா தினங்களும்,
எல்லா விஷயங்களும்
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கின்றது.