Thursday, March 13, 2008

டைடானிக்

கையெழுத்து.
அவசரமாக எழுதினாலும்
அழகாக
அச்சடித்ததுபோல் எழுதுபவன் இவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
தன் தலையெழுத்தை
தாமதமாக்குவான் என்று.

பயணச்சீட்டுக்குள்ளேயே
பாடவேளைகளின்
பாடங்களை குறிப்பெடுப்பவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
பயணங்கள் பல செய்து
பரந்த வெளியில்
பறக்க பயமில்லாதவன் என்று.

குழு படிப்பால்
கோட்டை விட்டு
அடுத்த முயற்சியில்
அரியரை விரட்டி அடித்தவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
மனக்காட்டில் ஒளிந்திருக்கும்
வீரப்பனை
விரட்ட முடியாத கேப்டன் என்று.

தன் உணவை
பகிர்ந்து அளித்துவிட்டு
பசியோடு
திருவரம்பூர் திரும்புவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
தன் காதலை
பதுக்கி வைத்துவிட்டு
காதலை தோற்கடித்த்து
கவலைப்பட விரும்புவன் என்று.


தனக்கான வேலை
தாமதமானாலும்
நண்பனுக்காக நடு ராத்திரி வரை
பக்கங்களை வெட்டி ஒட்டி
திட்டத்தை முடித்து கொடுத்தவன்.

அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
நண்பன் காதலுக்காக
நடு ராத்திரி வரை
திட்டங்கள் போட்டு கொடுத்தாலும்
தனக்கான வேலை
தாமதமாவது தெரியாதவன் என்று.

கடலில் ஆரம்பித்து
காதலில் மிதந்து
கடலோடு அமிழ்ந்த
கப்பல் திரைப்படத்தின்
கதாநாயகன் இவன்.

அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
நிறுவனத்தில் ஆரம்பித்து
நித்தமும் அவளை நினைத்து
நிசப்தமாய் உரையாடி
நெஞ்சுக்குள்ளேயே அமிழ்த்திக்கொள்ளும்
கதை நாயகன் என்று.

கனவுக்கு கண்கள் வைத்து
கற்பனைக்கு காது வைத்து
ஆசைக்கு மீசை வைத்து
அதில்
முயற்சி எனும் மூச்சை வைத்தால்
காதல் எனும் முகம்
கண் முன்னே தெரியும்.
இவனுக்கும் தெரிந்தது.


சென்று சேர்ந்திருக்க வேண்டிய
செல்லமான அந்த மூத்த படகு
கரை சேரட்டுமே என்று
காத்திருந்தது சரிதான்.
அதற்காக
அதுவரை
கரையிலேயெ நிற்பேன் என்பது
எந்த விதத்தில் நியாயம்?

எப்படியோ
எந்த கணத்திலோ முடிவடுத்து
ஏறுகிறான் காதல் கப்பலில்.
காற்று போன போக்கில்
கப்பல் போகிறது.
கானல் போன போக்கில்
காதல் போகிறது.

எதிரே
எதிர்காலம்
பனிக்கட்டி மலையாய்
படர்ந்திருக்குமோ என்ற பயத்தில்
பாதிவழியில் திரும்பி
புறப்பட்ட இடத்தையே சேர்கிறான்.
இவன் கரைசேர வேண்டுமென்பதற்காக
ஓடுகின்ற நீரெல்லாம்
பாதை மாற்றி - இவன்
பாதையில்
பயணிக்கும் என காத்திருப்பதில் நியாயமா?

இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதால்
இந்த கரையும் வேண்டாம்
அந்த கறையும் வேண்டாம் என்றால்
பொறுமையாய் காத்திருந்து
பெற்றோர் சொல்லும்
புதிதான கரையை சேர்வாயா?
அதுமட்டும் பச்சையாய் இருக்குமா?

ஓடிவந்து கட்டிப்பிடிக்கும்
எந்த குழந்தைக்கும்
நினைவில் இருந்ததில்லை
நேற்று விரட்டி அடித்தது.
அதுபோல தான் காதலும்.
விரட்டி அடித்தால்
துரத்தி பிடிக்கும்.
விலகி ஓடினால்
தூரத்தில்தான் நிற்கும்.

உடல்நிலை சரியில்லாத
உன் நிலையை சரிசெய்வதற்கு
ரத்தம் எடுக்கத்தான் வேண்டும்.
அப்போது வலிக்கிறது என்பதற்காக
நோயுடனே இருந்திட முடியுமா?

சூழ்நிலை சரியில்லாதபோது
உன் உள்ளத்தை வலுப்படுத்த
தோல்விகள் வரத்தான் செய்யும்.
தோற்கிறாம் என்பதற்காக
முயற்சி செய்யாமலிருக்க முடியுமா?

கரையை சேர்வதற்கு
கடல் வற்றும்வரை
காத்திருந்தால் கரை சேர்வோமா?

உயர பறக்கும்
எந்த பறவையாவது
கீழே விழுவதைப் பற்றி யோசித்திருக்குமா?

மனக்கதவை உள்பக்கமாக
தாழிட்டுவிட்டு , வெளியே வ்ந்து
தானே கதவை தட்டினால்
திறக்கப்படுமா?

பழம் நழுவி பாலில் விழுந்து
அது நழுவி தேனில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்தால்
அப்போது சாப்பிடுகிறேன் என்றால்
பட்டினியாய் இருக்க இவன் தயாரா?

இருளில் நன்றாக விழித்து
எதுவும் தெரியவில்லை என்பதால்
பகலில் கண்களை மூடிக்கொண்டு
எதுவும் தெரியவில்லை என்பதால்
கண் குருடாகிவிட்டது என்றால்
என்ன நியாயம்?

கரை - இவனை
கரை சேர்க்க அனுமதிக்குமா?
கரைக்கு இவன்
கரை சேர ஆசைப்படுவது தெரியுமா?

கறையாகிப்போனாலும்
கவலையில்லை,
கரை சேர முயற்சிப்பதில்லையென
முடிவெடுத்திருக்கானா?

இவனுக்கான
கரையில் வேறு கப்பல் ஒதுங்கிவிட்டதா?

அருகில் செல்லும் படகுகள்
வேகமாகவும்
விவேகமாகவும் செல்லும்போது
உனக்கு மட்டும் என்ன யோசனை?

கலங்கரை விளக்கமாய்
கரையில் இருக்கதான் முடியும் நண்பர்களால்.
கரை சேர்க்க வைக்க முடியுமா?

ஒன்று மட்டும் தெரியும்
நீ பாலைவனத்தை ரசிப்பவன் அல்ல.

கப்பலுக்கு நங்கூரம்
கடல் அலைகளிலிருந்து
காத்துக்கொள்ள.
கரையோரத்தில்
கொஞ்சநேரம் நிறுத்திக்கொள்ள.
தான் போகும் பாதையை
தடுத்துக்கொள்ள அல்ல.

இந்த கேள்விகள் ,
நாங்கள் பதில் தெரிந்துகொள்வதற்காக அல்ல.
பதில்களை நீ தேடி வைத்துக்கொள்வதற்காக.

No comments: