நீ மழை ..... நான் மண்..., ஒரு பயணம்

நீயும் மழைதான்.


வேகமான காற்று
உன் பேச்சு.


பாரமான மேகம்
என் நினைவுகளை சுமந்த உன் இதயம்.


முன்னறிவிப்பின்றி சில மழை.
திடீரென்ற உன் அழைப்புகள்.


முன்னறிவிப்பிருந்தாலும் பெய்யாத மழை.
பதிலளிக்காத என் அழைப்புகள்.


தனலை தனிக்கும் கோடைமழை
தவறாமல் நீ தரும் ஆறுதல்கள்.


காலநேரம் இல்லாத கடும்மழை
கடுமையான உன் கேள்விகள்.


பார்ப்பதற்குள் மறைகிற மின்னல்
காண பிடிக்காத உன் கோபங்கள்.


காணக்கிடைக்காத வானவில்
எதிர்பார்க்காமல் எதிரில் வரும் நீ.


சிலநேரம் சில்லென்ற சாரல்
சின்ன சின்ன உன் கொஞ்சல்கள்.


தொடர்ந்தும் சலிக்காத தூரல்
தெரியாமல் தொடும் ஸ்பரிசங்கள்.


மழைதான் நீ.


மழையில்,
இரு சக்கர வாகனத்தில் ,
இருவரும் அருகருகில்.


வாகனம் நெருங்கும்போதெல்லாம்
வேகத்தை குறைக்க சொல்லி
விரல்கள் என்னை அழுத்துகிறது.
தூரம் குறைவான பயணமாதலால்
நேரம் அதிகமாக்க
நீ சொல்வதுபோல் நினைத்து
நிதானமாய் சென்றேன்.


வாகனத்திலிருந்து
கால்களை தரையில் வைக்கிறாய்.
இடிச்சத்தம் கேட்கிறது.
தான் தரையாயிருக்க கூடாதா என்று
வானம் கோபப்படுகிறதோ?


இடி நிற்க வேண்டி
கண்மூடி நீ வேண்டிய போது,
கண் திறந்து உனை ரசித்த நான்
புயல் நிற்க வேண்டினேன்.
மனதில் அடிக்கிற புயலை...


மழையில்
நம் நான்கு கைகளும்
உன் மூன்றாவது கைக்கு கீழ்.
ஆமாம்!!!
நீ குடை பிடித்திருக்கிறாய்.
உன்னை சுற்றி பார்க்கிறேன்.
நம்மை சுற்றி பார்க்கிறேன்.
வெளியில் பெய்யும் மழையை விட
குடையிலிருந்து விழும் மழை
கொஞ்சம் அதிகமாயிருக்கிறதே?
ஏன்??
உன்னை சேர்வதற்காக பெய்த மழைத்துளி
உன் மேல் விழாமல் குடை தடுத்து
மண்ணைச் சேரப்போவதால்
அழுகின்றனவோ?




மழையில்
மின்னலின் வெளிச்சம்
என் கண்களை பறித்ததே இல்லை.
அன்று நீ சிரித்த மின்னல்
அதை பொய்த்தது.


இடி இடித்து நான் ஆடியதில்லை.
இடி இடித்து நீ பயந்து - என்னை
இடித்ததால் நான் ஆடிப்போனேன்.





செல்லும் பாதையில்
செதுக்கி இருந்தன சில வார்த்தைகள்.
நீ என்று சொல்லும்போது
ஒட்டாத உதடுகள்,
நான் என்று சொல்லும்போதும்
ஒட்டாத உதடுகள்,
நாம் என்று சொல்லும்போதுதான்
ஒட்டும்.
சொன்னது கலைஞர்.
நாம் - ஏதும் சொல்லாத போதுகூட
உதடுகள் ஒட்டிதானே இருக்கிறது.


சாலை பள்ளத்தில்
சட்டென்று இறங்கியது வாகனம்.
நிலை தடுமாறிய நீ
என் தோள்களை பிடித்ததில்
நிலை தடுமாறினேன் நான்.
என்னை பிடிக்கவில்லை என்றால்
அங்கேயே விழுந்திருப்பேன் என்றாய்.
ஆமாம்!!!
என்னை பிடிக்கவில்லை என்றால்
எங்கோ விழுந்திருப்பாய் என்றேன்.
உனக்கு புரியவில்லை.
எனக்கு புரியவைக்க மனமுமில்லை.




மழையில் - நீ
கால் வைத்த தடத்தில்
மழை நீர் சேர்கிறது.
கடலுக்கு செல்லும் மழையை விட
உன்
கால்தடத்தில் செல்லதான் அவை
காத்திருந்து பெய்ததோ?


மழையில் ,
நச நச வென்று ஏதோ சத்தம்.
யாரோ பேசுவது போல் இருக்க
யதார்த்தமாய் திரும்பினால்,
மழைத்துளிகளுக்குள் யுத்தம்.
மழைத்துளிகள் பேச
மலைத்து போய் நின்றேன்.






முதலில் பேசியது
மண்ணில் விழும் துளி.
கடலுக்கு சென்று ஆவியாவதை விட
இவள்
கால்தடத்தில் சகதியாகும்
நான் தானே பாக்கியசாலி என கேட்டது.


ஆர்ப்பாட்டமாய் பேசியது
அவள் மேல் விழப்போகிறோம் என்று வந்து
அவள் பிடித்த குடையில் விழும் துளி.
எங்கோ விழுவதை விட
இவள் பிடித்த குடையில் விழும்
நான் தானே பாக்கியசாலி என ஏமாந்து கேட்டது.




ஆனந்தமாய் பேசியது
அதனருகே விழும் துளி.
கால்தடத்தில் சகதியாவதை விட
ஆவியாகி அடுத்த மழையில்
அவள் மீதே பெய்ய போகும்
நான் தானே பாக்கியசாலி என கேட்டது.


அமைதியாய் பேசியது
அவள் மேலே விழுந்த துளி.
அடுத்த மழையில் சேர்வதைவிட
அவள் மீது இப்போதே விழுந்துவிட்ட
நான் தானே பாக்கியசாலி என கேட்டது.




நான் இருக்கும்போது
என்னைப் பார்க்காமல்
என்னிடம் பேசாமல்
தரையை பார்த்துக்கொண்டு
தனக்குள்ளே பேசிக்கொள்கிறாயே? என்றாய்.
உனக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
எனக்கு புரியவைக்க மனமுமில்லை.


வான்மழையை தூதுவிட்டு
வருணபகவான் காத்திருக்க,
வந்த மழையை தடுத்துவிட்டு
குடைக்குள் நாம் காதலிக்க,
வருத்தத்தில் அழுகிறான்.
கடும்மழை.


தூது விட்ட மழைத்துளிகள்
தொலைந்துவிட்டனவோ என்று,
மறைந்திருந்து,
வானத்திரையை
வேகமாய் கிழித்துவிட்டு,
வேகமான மழைக்காதலை
கோபத்தில் பார்த்துவிட்டு,
கிழித்த திரையை மூடிக்கொள்கிறான்.
மின்னல்.




தன் காதல் தோற்றுவிட்டதாய் எண்ணி
வானச் சுவரில்
தன் தலையை இடித்துக் கொள்கிறான்.
இடி.




கலைந்து போகிற மேகங்களுக்குள்
மறைந்து போகிறது நிலா.
நிலாவைக் காணவில்லையே என்றாய்.
இந்த மழையில்
நான் தான் என்னை தொலைத்தேன் என்றால்
நீயும் உன்னை தொலைத்துவிட்டாயா? என்றேன்.
உனக்கு புரியவில்லை
எனக்கு புரியவைக்க மனமுமில்லை


நிலாவை பார்க்க வேண்டுமென்றால்
அன்னாந்து பார்க்காமல்
அப்படியே குனிந்து
இங்கே பார் என்று
தேங்கியிருக்கும் மழைநீரை காட்டினேன்,
உனக்கு புரியவில்லை
எனக்கு புரியவைக்க மனமுமில்லை.



மழையில்
அதிகம் நனைந்திருக்கிறாய் நீ.
மனதிலும்
அதிகம் நனைந்திருக்கிறேன் நான்.
ஜலதோஷம் வரும் போலிருக்கிறதென்று
மாத்திரை வாங்க செல்கிறாய்.
உனக்கும் வேண்டுமா என கேட்கிறாய்.
எனக்கு மாத்திரையே
மழையில் நனைந்ததுதான் என
மனதில் நினைத்து, வேண்டாம் என்கிறேன்.
உனக்கு புரியவில்லை.
எனக்கு புரியவைக்க மனமுமில்லை.




மண்ணோடு மழையின் காதல்
தற்காலிகமாக முடிந்துபோக,
மழை தந்த மண்வாசனையை சிறிது நேரம்
மழை தந்த ஈரத்தை வெகு நேரம்
மழையில் சேகரித்த நீரை
அடுத்து மழை வரும் வரை.


ஆகையால்!!!.
நான் மண் தான்.