இயந்திரங்களோடு ஒரு பயணம்

இயந்திரங்களோடு ஒரு பயணம்

இருபது ஆண்டுகளுக்கு பிறகு
இரயில் பயணம்.
இளைஞனானது என் மனது.

இருக்கை அமைப்பு
எட்டு பேருக்கு.

ஏழு பேருடன்
எப்படி இருக்கும் பயணம் என்ற
எதிர்பார்ப்புகளோடு
ஏறினேன்.

இறங்கும்போது
இப்படியா? இருக்கும் பயணம் என்ற மலைப்பு.

ஏறியதிலிருந்து
இறங்கும்வரை
யாரிடமும் பேசிடாத இளைஞன்.

ஏறியதிலிருந்து
இறங்கும்வரை
யாரிடமோ கைபேசியில்
பேசிக்கொண்டேயிருந்த இளைஞி.

பேசுவதுபோல் தோற்றமளித்து
பாடலுக்கு முனுமுனுத்து
சுற்றங்களின் சத்தத்தை மறைக்க
காதுகளுக்கு மட்டும் இரைச்சலை ஒலித்து
கால்களை ஆட்டிக்கொண்டே
அமர்ந்துகொண்டிருக்கும் ஆண்.

அலைவரிசை கிடைக்காமல்போக
அடுத்த நிறுத்தம்வரை காக்க பொறுக்காமல்
அலைபேசியை ஆட்டி ஆட்டி பார்க்கும் பெண்.

பயணப்பெட்டியின் நடைபாதையை
சுத்தப்படுத்தும் ஊனமுற்றவனிடம்
காசு கொடுக்க மறுத்து
தூங்கி எழும்போது
தவறி விழுந்துவிட்ட நாணயத்தை
குனிந்து எடுக்க நேரமில்லாமல்
இறங்கிவிட்ட தயாளன்.

தண்ணீர் வாங்காமல் ஏறிவிட்டு
உணவு சாப்பிடும்போது
தொண்டை அடைத்தவனை,
போர்வை விலக்கி பார்த்துவிட்டு
காலையில்
கொஞ்சம் மட்டுமே குடித்த
தண்ணீர் பாட்டிலை
அப்படியே விட்டுவிட்டு
இறங்கிவிட்ட தயாளினி.

'நகரம் ஒளிர்கிறது' என்ற
அரசியல்வாதியின்
பேட்டியை படித்துக்கொண்டே
குடிசைகளை கடந்துசெல்வதை
பார்க்க மறந்த செய்திவாசிப்பாளன்.

இவர்கள் பயணிகளா?
இதற்கு பெயர் பயணமா?

பேசுவதற்கு எது தடுக்கிறது?
மொழியா?
நம்பிக்கையில்லா தன்மையா?

பொறுமையை எது சோதிக்கிறது?
தொழில்நுட்பமா?
தெளிவில்லா தன்மையா?

கொடுக்கும் மனம் ஏன் கல்லாகியது?
கஞ்சத்தனமா?
சோம்பேறித்தனமா?

ரசனை ஏன் குறைந்துவிட்டது?
பார்வையில் மாற்றமா?
பார்ப்பவரிடம் மாற்றமா?

இரயிலின் வேகமும்
வாழ்க்கையின் வேகமும்
பயணங்களை மட்டுமல்ல.
மனங்களையும் சுருக்கிவிட்டது.

இந்தக்கால தலைமுறை
பிரயாணங்களை ரசிப்பதேயில்லை.
பிரயாணிகளை பார்ப்பதேயில்லை.

இந்தக்கால தலைமுறை
இயந்திரங்களில்
இயந்திரங்களாய் பயணிக்கிறார்கள்.

இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
இரயில் முன்பைவிட நீளமாகத்தான் இருந்தது.
ஆனால், பயணம்?