சார்மினாருக்கு அருகில்..,
வெள்ளிக்கிழமை
வெண்பகல்.
வாரம் ஒருமுறை
வருபவர்கள் வந்துவிட்டார்கள்.
வேறு வேறு வரிசையில்
வந்து நின்றுவிட்டார்கள்.
வழக்கம்போல்
எனை எல்லோரும் பார்க்கிறார்கள்.
கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
கால்களை மடக்கி
முகத்தால் தரையை தொடுகிறார்கள்.
தவறுக்கு மன்னிப்பா?
கிடைத்ததற்கு நன்றியா?
இல்லை.
கிடைக்க வேண்டியதற்கான வேண்டுதலா?
நான் கடவுள் அல்ல.
நான் ஒருவனே அல்ல.
எனை ஏன் வணங்குகிறார்கள்?
கல்லின் மேலமர்ந்திருப்பதால்
நான் சமாதியும் அல்ல.
நான் ஒருவனில்லாததால்
நான் அவனும் அல்ல.
எல்லோரும் குழுமியிருந்தோம்.
எல்லோரும் குனிந்திருந்தார்கள்.
எல்லோரும் மண்டியிட்டிருந்தார்கள்.
எனக்கும்
எங்களுக்கும் ஏனோ பசி,
நோன்பு எடுக்காவிட்டாலும்.
ஆ!!!
அந்த கல்லின்மேல்
உணவுப்பொட்டலம்.
சுற்றி உள்ளவர்கள் எல்லாம்
சத்தமிடுகிறார்கள்.
வேண்டாம் வேண்டாம் என்றா?
சுற்றி வரும் நாங்கள் எல்லாம்
சத்தமிடுகிறோம்
வேண்டும் வேண்டும் என்று.
பிரித்தேன்.
எனை மறந்து உண்டேன்.
திடீரென
புகையும் வாசனை.நெருப்பென்று பயந்து
விலக நினைக்கிறேன்.
பலத்த சத்தம்.
பேரிரைச்சல்.
உறவினர்களெல்லாம்
உயரப்பறக்கிறார்கள்.
உயிர்களெல்லாம்
உயிரைப் பிடித்துக்கொண்டு
வாசலை நோக்கி பறக்கிறார்கள்.
மனித ரத்தத்தோடு
என் ரத்தமும் சேர்கிறது.
காப்பாற்ற யாராவது வருவார்களா?
வந்தார்கள்
எனை தூக்கிபோட்டுவிட்டு
நானிருந்த இடத்தை
நான்கு கோணத்தில் புகைப்படம் எடுத்தார்கள்.
மந்திரி வந்தார்.
மறந்துவிட்டு
மண்டியிட்டு புகைப்படம் எடுத்தார்கள்.
குரல் போய்விட்டது எனக்கு
கத்தினாலும் காதில் விழாது உங்களுக்கு.
மனிதர்கள் யாரும் வருவார்களா?
எனை உயிராக்குவதற்கு?
கண்மூடியிருந்தவர்கள்
கண் மூடித்தனமாய் ஓடினார்கள்.
தரையில் குனிந்திருந்தவர்கள்
தலைகால் புரியாமல் ஓடுகிறார்கள்.
இறக்கும் வலியை விட
கொடுமையானது மதம்.
சிந்தும் ரத்தத்தை விட
கொடுமையானது மதக்கொள்கை.
ஐந்தறிவைவிட தீவிரமானது
ஆறறிவு.
உங்கள் சண்டையில்
என்னை கொன்றது
எந்த விதத்தில் நியாயம்?
எனக்காக யார் அழப்போகிறார்கள்?
திருந்துங்கள்.
எனைச் சுற்றி
என் உறவினர்கள்
உறக்க கத்தும் சத்தம் கூட
புரியவில்லையா?
அரை உயிராயிருந்த எனை
குறை உயிராய் மாற்ற
சில மிதித்தல்கள்.
மதிய நேரத்திலேயே
மாலை நேரம் போல் தெரிகிறது,
கண்கள் மெல்ல மெல்ல
பார்வை இழக்கிறது.
எங்களை மாடப்புறா என்று சொல்லாதீர்கள்.
துணைக்கால் தேவையில்லை.
என் உயிரை பிடுங்கிய நீங்கள்
என் பெயரின் முதல் நெடிலையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இறந்தவர்களின் எண்ணிக்கை
என் நிலையால் உயருமா?
என் இறப்பு கருதப்படுமா?
பசிக்கிறதென்று சொன்ன என் மகன்
பாதி உயிரோடு கிடக்கிறான்.
காப்பாற்ற சென்ற என் மகன்
உயிரற்று கிடக்கிறான்.
உறவற்று போன நான்
சக்தியற்று நிற்கிறேன்.
இரு விரல்களால்
மூவரையும் தூக்கியெறிந்து
என் புறங்களை கழுவியது.
கண்களை மூடி
தலையை தரையில் கிடத்தி
சாய்கிறேன்.
அடுத்த ஜென்மத்தில்
எனை ஐந்தறிவாகவே படைத்துவிடு
மனிதம் இரக்கமற்றது.
ஆறறிவு அர்த்தமற்றது.