Friday, March 14, 2008

காதல் கவிதை

உணர்ச்சிகள்,உணர்வுகள்,உறவுகள்
இதுதான் இவன் உலகம்.

இலக்கணம்,இலக்கியம்,பிழை
இப்படிதான் இவன் கவிதைகள்.

இயல், இசை, நாடகம்
இப்படிதான் இவன் விருப்பங்கள்.

கவிதை,கதை,பொய்
இப்படிதான் இவன் பேச்சுகள்.

பாசம்,காதல்,கோபம்
இவைதான் இவனை ஆட்சி செய்யும் அரசர்கள்.

சிரிப்பு,அழுகை,மௌனம்
இப்படிதான் இவன் தினங்கள்.

வெற்றி,தோல்வி,ஏக்கம்
இப்படிதான் இவன் முயற்சிகள்.

வலி,தழும்பு,மருந்து
இப்படிதான் இவன் தோல்விகள்.

உணர்ச்சிகளை
வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த - இவனுக்கு,
கட்டுப்படுத்த கற்றுக்கொடுத்தது
கல்லூரி வளாகம்.

தேர்வுக்கு,
விழித்திருந்து படிக்கும்
நண்பர்களுக்கு நடுவில்
படுத்திருந்து நடிக்கும்
பாதகன்.

தேர்வு முடிவுக்கு,
நடுங்கிக் கொண்டே காத்திருக்கும்
நண்பர்களுக்கு நடுவில்
தெரிந்திருந்தே நடிக்கும்
மாணவன்.

ஆரம்பத்தில்
வார்த்தைகளுக்கே வழியில்லாமல் இருந்து,
முடிவில்
அடுக்கடுக்காய் தாள்களை எழுதி
அரியருக்கு அருகில் போகாமல்,
தேர்ச்சி பெறும்
நேர்த்தி அறிந்தவன்.

காத்திரு என்று சொல்லிவிட்டு
காலம் தாழ்த்தியதால் -
காலை வாறிவிட்டவன் - என
பட்டம் பெற்றவன்.

எழுந்து வா என்று சொல்லிவிட்டு
எழுதிக்கொண்டே இருந்ததால்
ஏமாற்றியவன் - என
பட்டம் பெற்றவன்.

குடும்பத்திற்காக,
காதல் ஆசை தானே தவிர
காதல் வெறியல்ல - என
தன் மீதே நம்பிக்கையில்லாதவன் போல்
தோற்றமளித்து தோற்றவன்.

காதல் மரம் - ஒன்று - செழிக்கலாம்,
அல்லது பட்ட மரமாகலாம்.
அவ்வளவுதான்.
பட்ட மரத்தின் வேர்கள்
அடுத்த மரத்திற்கு நீர் கொடுக்குமா? என
கல்லூரியில் வேதாந்தம் பேசியவன்.

பட்ட மரத்தின் வேர் வழியே
அடுத்திருந்த ஓர்
ஆலமரத்தையே வளர்த்திருக்கிறான்.

வேதாந்தம் பேசிய - பழைய
வேதாளம்
தோள்களை விட்டு வேறு மரத்தில்
தொற்றிக் கொள்கிறது.

இவனது
கல்வி வாழ்க்கையில் மட்டுமல்ல,
காதல் வாழ்க்கையிலும் கூட
பொறுமையாய் ஆரம்பித்து
அருமையாய் வளர்கிறாள்
கல்விக் கடவுள்.

இவன் காதல்
மதில் மேல் பூனை.
இதில்
மதிலுக்கு இந்த புறம் பெற்றோர்கள்.
மதிலுக்கு அந்த புறம் திருமண வாழ்க்கை.
இதில் பூனை
இவன் காதல் ஆசை.

பூனை கண் மூடும்போதெல்லாம்
பூலோகம் இருண்டுவிட்டதாய்
பயப்படுமாம்.
அது போலதான் இவன் காதல் ஆசையும்.

இந்த பூனைக்கு
வந்தது ஒரு ஆசை.
இது ஆசைப்படுவது
இங்கிருந்து அங்கு தாவ அல்ல.
மதிலை உடைத்து
இரு புறங்களையும் ஒன்று சேர்க்க.

பூனை எடை அதிகமாக,
மதில் மேல் சமாளிக்க முடியுமா? என
மனதில் கேள்வி எழுகிறது.
மதில் தானாய் உடைந்துவிடாதா? என
ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறது.

எப்படி ஜெயிக்கபோகிறாய்? என
என்றோ ஒரு நாள் கேட்டதற்கு,
இத்தனை செய்திருக்கிறேன் அவர்களுக்கு.
இதுகூட செய்ய மாட்டார்களா எனக்கு
என கேட்கிறான்.

பத்து நல்லது செய்தால்
ஒரு தவறு இலவசம் என்று
இவனுக்கு யார் சொன்னது?
இதை
இவனிடம் யார் சொல்வது?

இழந்தவர்களுக்காக
இயன்ற வரை அழுது,
இருக்கும் இளையவளுக்காக
முடிந்த வரை முயன்று - இருவர்
மூவராகியதில் மகிழ்ந்தான்.

கல்விக் கடவுள் உணர்வுகளை
காலையும் மாலையும்
காலந்தோறும் - சுமந்து சுமந்து
மனம் பலசாலியானது.

போட்டிக்கு இவன் தயார்.
போட்டி இவன் பெற்றோர்களோடு.
ஒவ்வொரு முறை இவன்
மோதிவிட்டு
வார்த்தைக் காயங்களோடு வரும்போது
உதட்டோரப் புன்னகையில்
அவள் மருந்திட்டால்
காயங்களை மறந்துவிட்டு
மாயங்களை செய்துகாட்டி
மாலையோடு வந்துவிடுவான்.
காதல் வெறியில் வெற்றியோடு.

எதிரில் வருபவர்கள்
எலியாய் வருகிறார்களா?
எப்படி வரப்போகிறர்கள்?
அந்த பூனை போலவே
ஆவலோடு காத்திருந்தோம்
அந்த
ஆனந்த அதிர்ச்சி நாட்களுக்காக...

அந்த நாளும்
வந்தது.
ஆனந்த அதிர்ச்சியை
தந்தது.
மதில்
தானாக உடைந்தது.
மனம்
தாறுமாறாக பறந்தது.

இவனுக்குப் பிடித்த பொருளை
இவனுக்குள் வைத்திருந்த பொருளை
உரியவர்களுக்கும்
உலகுக்கும் அறிவித்து
இவனுக்குப் பிடித்தது போலவே
இவனுக்குள் வைத்திருந்தது போலவே
அரவணைக்க வேண்டி
ஆவலோடு காத்திருக்கிறான்
அவளோடு சேரும் நாளுக்காக..,

No comments: