Wednesday, March 17, 2010

பயணங்கள் முடிவதில்லைபயணங்கள் முடிவதில்லை

இவன்
நட்பு மரத்திற்கு
ஆரம்ப வேர் மட்டுமல்ல
ஆணிவேர் கூட.


இவன்
வேளாங்கண்ணியை
வீட்டுக்கு அழைத்தவன்.

திட்டம் மட்டுமே தீட்டுபவன் - என
திட்டு வாங்குபவன்.

காதல் தோல்வியில் வெந்தவன்,
நட்பின் ஏமாற்றத்தில் நொந்தவன்,
தேர்வில் தோற்று துவண்டவன்,
இப்படி
புண்பட்ட நெஞ்சங்களை
பண்பட்ட வார்த்தைகளாலும்
பன்னீர் சோடாவாலும்,
குளிர வைப்பவன்.

அன்னைக்கு
பெண்குழந்தையானவன்.

நண்பர்களில் ஒருவனுக்கு
அன்னையானவன்.

இவனுக்கு என்று
தனி மணம் இல்லை.
தன்னுடன் உள்ள
நட்புப் பூக்களை தொடுத்து
மாலையாக்கி மகிழ்ந்து கொள்ளும்
நார் இவன்.
நாதர்ஸ் இவன்.

வார்த்தைகளில் பல் படாமல் பேசி
விஷயங்களை விஷ ஊசியில் குத்தி
விஷமம் செய்பவன்.

தஞ்சை பெரியகோவிலில்
தன் விபூதிக்கு காரணம் கூறி
தன்னை மறைத்துக்கொண்ட கலசத்தின்
வெப்பமான நிழலில்
வெளிச்சமாய் நின்றவன்.

வீட்டுக்கு நண்பர்களை அழைத்து
மாட்டி வைத்திருக்கும் புகைப்படத்தை
காட்டி -
விடுகதை போட்டு
விடை தெரிவித்து
விருந்தினர்களை
விம்மி விம்மி அழ வைத்தவன்.

பிறர் சந்தோஷங்களில்
தன் சந்தோஷங்களை காண்பவன்.

ஜோடி செருப்பை கொடுக்க சென்று
ஜோடியை பிரித்தவன்.

முன்னமே அழுதுகொண்டிருப்பவன்
முன்னே சென்று
முன் நடந்த நிகழ்வுகளை
முன் வைத்து
முன்னைவிட அதிகமாய் அழ வைப்பவன்.

அந்நியன் படத்தை - சதா
அவளுக்காகவே பார்த்தவன்.

தென்மதுரை வைகை நதியில்
தேனாய் ஓட
தேன் தேடித் தந்து
தித்தித்து ரசிக்கும் சகோதரன்.

இவன்
காதலுக்கு திசைகாட்டியா?
நட்புக்கு இலக்கணமா?
உறவுக்கு நூலகமா?
பாசத்திற்கு பஞ்சாங்கமா?
அன்புக்கு அகராதியா?
இவை அனைத்துமா?

இவனுக்கு கிடைத்த
உறவுகள் வலிமையானதா?
இல்லை,
இவனை சேர்ந்ததும்
உறவுகள் வலிமையாகிப் போகிறதா?

காதலுக்கு வழி சொல்லும் இவன்
காதலின் வலியை அறிந்திருக்கிறானா?

பகட்டாக தெளிவாய்த் தோன்றும் இவன்
என்றாவது குழம்பி இருக்கிறானா?
எவரையாவது குழப்பி இருக்கிறானா?

திசை காட்டியாய் தெரிந்த இவன்
திக்கு தெரியாமல் பயணித்திருகிறானா?

பதில் தெரியாத கேள்விகளுக்கெல்லாம்
பாதி பதிலாய்
பல பயணங்கள்.
மீதி பதிலாய்
சக பயணிகள்.

பேருந்தில் ஆரம்பித்த
பயணம் நிரந்தரமென்று
தற்காலிகமாய் யோசித்தான்.
நிரந்தரமாய்
தற்காலிகமாகிப்போனது.

இவன் ஓட்டுநருமில்லை.
இறங்கிய இடம் நிறுத்தமுமில்லை.
முதலில் இறங்கியது
யாரென்றும் தெரியவில்லை.

புகைவண்டி பயணம்
பெற்றவருக்கு கொஞ்சம்
புகையை கிளப்பிவிட்ட பயணம்.
இறங்கிய இடத்தில்
இறக்கிவிட்ட பயணம்.

வானூர்தியில் அடுத்த பயணம்.
மேகங்களுக்கு மேலே
பயணித்ததால்
நிலத்திலிருந்தவர்களுக்கு
நிலமை தெரியவில்லை.

தூரம் அதிகமாகத்தான் இருந்தது.
வேகம் அதிகமாயிருந்ததால்
பயணம் சிறியதாகிப்போனது.

அடுத்த பயணம்.
வாகனங்களை நம்பாமல் - கொடுத்த
வாக்குகளை ஏமாற்றாமல்
வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த
நடை பயணம்.
நிரந்தர பயணம்.

தாய் கைகோர்த்துவிட
தந்தை கதவுகளை திறந்துவிட
அண்ணன் வழியில் பின் தொடர
அவளோடு ஆரம்பித்த பயணம்.

கிளிசெரின் இல்லாத
வாழ்க்கைத் துணையோடு பயணிக்கும் - இந்த
வாழ்க்கையில் பயணிக்காத
வாகனங்களில்லை.
இந்த முறை
பயப்படாத பேருந்துப் பயணம்.
இறக்கிவிடாத இரயில் பயணம்.
தூரம் குறையாத வானுர்திப் பயணம்.

பயணங்கள் கற்றுத்தராத
பாடங்களேயில்லை.

பயணங்களில்தான்
ஆசை அசை போடும்.

காற்றோடு சேர்ந்து காதலும்
கதவு இடுக்குகளில் புகுந்து முளைக்கும்.

கற்பனை சிறகு விரிக்கும்.
சுற்றம் மறைக்கும்.
தன்னை மறந்து தூங்க வைக்கும்.

துக்கம்
தூக்கி எறியும் காகிதம் போல
தூர ஓடிவிடும்.

நடைபயணத்தின் வெற்றியாய் - இவனது
நான்கு கால்களுக்கு மத்தியில்
நடக்கத்தெரியாமல் நடக்கும்
ஆலியாவின்
அழியாத பிஞ்சுத்தடங்கள்.

இந்தப் பயணம்
முடிவில்லாத பயணம் மட்டுமில்லை.
இந்தப் பயணத்தில்
பயணங்கள் முடிவதில்லை.