Thursday, March 13, 2008

ஹே ராம்

நண்பன் என்றால் இவன்.
நண்பா என்பவன் இவன்.

கல்லூரி படிப்பெல்லாம்
காலப்போக்கில்
கலைந்துவிடும் மேகமென்று
வாழ்க்கையை படிப்பதை
வாடிக்கையாக்கிக் கொண்டு
வகுப்பறையில்
கடைசியில் அமர்ந்து
கதைப் புத்தகங்களை
கரைத்து குடித்தவன்.

பரீட்சைக்கு முதல்நாள்
படித்ததையெல்லாம்
பட்டியலிட்டு,
படபடப்பை ஏற்படுத்தும்
பயமுறுத்தி இவன்.

செவிக்கு உணவுள்ளபோதும்
சேகரித்து வந்த மதிய உணவை
சத்தமில்லாமல்
மிச்சமில்லாமல் முடித்துவிட்டு
எடுத்து வந்தவன் முகத்துக்கு முன்
ஏப்பமிடுபவன்.

என்ன பேசுவதென்றே
புரியாமல் நாம் விழித்த காலத்தில்
எண்ணிக்கையிட்டு பேசியும்,
அந்நியமான ஆங்கிலத்தை
அளவில்லாமல் பேசியும்,
ஆச்சர்யப்படுத்தியவன்.

நல்லவனா கெட்டவனா என
நாம் கேட்ட போதெல்லாம்
நாயகனைப் போலவே தெரியாதென்று
நம்மை குழப்பியவன்.

நப்பாசைகள் எதுவுமில்லாமல்
நட்பாசைகளை
நன்றாக தின்றுவிட்டு
நெஞ்சை நிமிர்த்தி நின்றவன்.

உருவத்திற்கும் செயலுக்கும்
சம்பந்தமே இல்லாததுபோல்
உள்ளத்தையும் உள்ளிருக்கும்
உணர்வுகளையும் புரிந்து கொண்டவன்.

நண்பர்களின்
மனக்குப்பைகளின் மேலேறி
சோகத்தில் தூங்குபவர்களை
அறிவுரை தண்ணீரை
அர்த்த ராத்திரிகளில்
அடித்து ஊற்றி
விடியலை காட்டும்
வித்தியாசமான கோழி இவன்.

தன்னுடைய வாழ்க்கையை
தான் போட்ட குப்பைகளுக்குள்
தானே தொலைத்துவிட்டு,
முடிந்தவரை தேடி தேடி
முதுகு வலி வரச் செய்தவன்.

காதலா நட்பா என்று கேட்டால்
காதலுமில்லை , நட்புமில்லை
காவல் என்று மழுப்பிவிட்டு
ஷங்கரைப் போலவே
சங்கதிகளை சொல்லி ஏங்கவைத்து
குழப்பிவிட்டு குதூகலிக்கும்
குதர்க்கவாதியே!.

மறைந்து போகிற
மேகங்களுக்குள்
முகம் தேடுகிறாய்.
கிடைக்கலாம். ஆனால், நீடிக்குமா?

காலப்போக்கில் கலைந்து போகிற
கால்தடங்களுக்குள்
யுகம் தேடுகிறாய்.
இருக்கலாம். ஆனால், நிலைக்குமா?

இவளோ அல்லது
அவளோ,
அல்லது வேறு எவளோ,
அவள் வந்து
உன் மனக்குப்பைகளை குவித்து
எரிகுச்சி வைத்து எரிப்பாள்.
எஜமானி - அவள் வந்து
எரித்து முடித்தாலும்,
சமாளிக்க முடியாத உன் சுற்றங்களை
சாம்பலாக்கினாலும்,
சிறிது காலம் புகையத்தான் செய்யும்.
அடங்கிய பிறகு
அதன் மீது கட்டு உன் மனக்கோட்டையை.
அசைக்கமுடியாத அஸ்திவாரத்தோடு.
ஆனால்,
மன பரிசோதனை செய்து கொள்ள
மறக்காதே!!!!!!!!!

உன்னை அங்கும் இங்கும்
உலகமெங்கும் தேடித் தேடி
கண்டுபிடித்த அந்த நாளில்
கேட்டோம் - கண்களில் கோபத்தோடு.
எங்கே இருந்தாய் என்று?.
உன்னை நீயே தேடிக்கொண்டிருந்ததாய்
உளறுகிறாய்.
கண்களில் மன்னிப்போடு.

நீ ஒளிந்திருக்கிறாய்.
நீயாகவே ஒளிந்திருக்கிறாய்...
நீ உன்னை தேடு.
நாங்கள் உன்னை தேடுகிறோம்....
நீ உன்னை கண்டறியும்போது .
நாங்கள் உன்னை கண்டுபிடிப்போம்.
அதுவரை
எங்கள் கேள்விகளுக்கு நீ
பதில் கூற தேவையில்லை.
எங்கள் அழைப்புகளுக்கு
பதில் கூறு.
அதுபோதும்!!!

No comments: