Wednesday, March 12, 2008

தாஜ்மஹால்


எங்களின்
எந்த ஒரு குடும்பத்திலும்
எவ்வித ரத்த பாசம் இல்லாவிட்டாலும்
எங்களுக்கெல்லாம்
மச்சானாகியவன்.

மச்சம் பார்த்து
மாட்டிக் கொண்டவன்.
கல்லூரி வாழ்க்கையில்
கோபியர்களோடு
கூடித்திரியும் மச்சமாகியவன்.

ஆசைகளை அடக்கி அடக்கி
காதலை பிழிந்து பிழிந்து
நட்பு மட்டுமே மிஞ்சியிருக்கும்
மிச்சமாகியவன்.

அவன் எழுதும்
கவிதைகளுக்குள்
அவன் ஒளித்திருக்கும்
அர்த்ததை போல
அவனையே தேடுகிறவன்.

வெள்ளந்தியான மனதை
வெளியில் காட்டி
பச்சோந்திகளை
தனிமையில் தன்னைதானே
பரிசோதிக்க செய்தவன்.

இவன் உலகம்,
தனித்தீவு.
எப்போதும் சிரிப்பலைகளால்
சூழப் பட்டது.
எப்போதாவது பேரலைகளால்
சூரையாடப் பட்டது.

இந்திய விநாயகர் எனும்
எங்கள் நட்பு கண்டத்திற்கு
அழகு சேர்க்க
அதனடியில் அமர்ந்திருக்கும்
இலங்கையெனும் மூஞ்சுறு இவன்.

நட்பு எனும் சிங்கள நாட்டுக்குள்
காதல் மனத்தின் இன உணர்வுக்கு
இடமில்லை என்று
அகதியாக்கப்பட்டு
அடுத்த மாநிலத்தில்
அடைக்கலம் புகுந்தவன்.

அகதியானபோது கூட
அருகேயிருக்கும்
நட்பு கண்டத்திடம்
ஆதரவு கேட்கவில்லை.
அகதியாகிவிட்டேன் என
ஆர்ப்பரிக்கவில்லை.

மன இன உணர்வை
மனதுக்குள் அடக்கிக்கொண்டு
தனக்கென ஒரு
வாழ்க்கையிருப்பதையும்
அதில், அவன் தான் ராஜா என்பதையும்
தானாகவே புரிந்துகொண்டவன்.

தான் அகதியானாலும்
நட்பு கண்டத்தில் வாழ
நண்பர்களுக்காக
உறைவிடம் தேடி
உறைந்து போனவன்.

இப்போதும் கூட
மனக்கப்பலில்
நட்புச்சரக்குகளை மட்டும் ஏற்றி
எண்ண அலைகளின் ஆட்டத்தில்
அவ்வப்போது
இன உணர்வை அறுத்துவிட்டு
சிங்கள நாட்டின்
செழிப்பை பார்க்க
சென்று வருகிறான்.

சென்று வரும்போதெல்லாம்
மனக்கப்பல்
முழுவதுமாய் ஈரமாகிறது.
கரை சேர்ந்ததும்
பெருமூச்சுத் தென்றலில்
அத்தனை ஈரமும் காய்ந்துபோகிறது.

இரண்டு கண்டத்திற்கிடையில்
இருக்கும் இந்த
நட்புச்சரக்கை விடுங்கள்.
இருக்கும் கண்டங்களுக்கெல்லாம்
இவன் மூலம்தான் சரக்கு செல்கிறது.
அதிலேயே இவன் மனம்
ஆனந்தமடைகிறது.

உனக்கென தேடிய
தீவை விடு நண்பணே,
உன்னையே உலகம் என
நினைக்க பிறந்தவள்
எங்கோ இருக்கிறாள்.
அவளை கண்டுபிடி.
அவள் காத்திருக்கிறாள்.
அவளை போலவே காத்திருக்கிறோம்......

No comments: