ஐம்புலன்களை
ஐந்து விரல்களுக்குள் அடக்கினால்
ஐம்பூதங்களை ஆளலாம்
என்பதில்
ஐயமில்லாதவன்.
படிக்கத்தானே வந்திருக்கிறோம்
படித்து காட்டுவோம் என்றவன்.
நண்பன் தானே நானும் என
நடுவில் தலை விடுபவன்.
துவண்டு விழும்போதெல்லாம்
தோள் தாங்கி நிற்பவன்.
மன பாறையையும் மீறி
காதல் வேர் துளிர்க்கும் என
காதலை வளர்த்தவன்.
கல்லூரி காலத்தில்
நண்பர்கள் இவனுக்கு உடை.
கடவுள் இவனுக்கு உணவு.
கல்வி இவனுக்கு உடல்.
குடும்பம் இவனுக்கு உயிர்.
மண நதியில் நீர் வருமென்று
கரையில் காத்திருந்தவனுக்கு
காலப் போக்கில்
மன வெள்ளம் வந்து
கரையை புரட்டிப் போடுகிறது.
நதியின் பாதையை
திருப்பிப் போடுகிறது.
நதியென்றால் வெள்ளம் வருமே,
அதனால்,
அரிக்கப்பட்ட கரையை குறை சொல்வதா?,
இல்லை,
நதி தானே நீ
எப்படி வெள்ளமாகலாம்
என நதியை குறை சொல்வதா?
மழைநீர் சேர்ந்ததால்தானே
வெள்ளம் வந்தது,
இதற்கு நதி என்ன செய்ய முடியும்?
அது கரைக்கு தெரிந்தாலும்,
அரித்துவிட்டு போனதால்,
கரையில் இருந்த மரங்களை
ஆட்டிவிட்டு போனதால்
கரைதான் நதியை நெருங்க முடியுமா?
நதியை விடு,
கரையை விடு,
நதிக்கும் கரைக்கும் நடுவில்
வெள்ளத்திலும் வளர்ந்த
வெள்ளை ரோஜா?
கரை
தானாக தன்னிடம்
மண் உணர்வுகளை ஒட்டிக்கொண்டு,
மறந்து
நதியை சேருமா?
இல்லை,
நதிதான்
ரோஜாவின் வேர்க்காக
கரை உரசி
மண் சேர்க்குமா?
கரையில்
மரங்களிருந்தால் போதுமென
மனம் நினைக்கிறதா?.
கரை எப்படி நகரும்,
நதியாய் வரட்டும் என
காத்திருக்கிறதா?
நீர் பாய்ந்த காலங்களெல்லாம்
நினைவிலிருக்கிறதா?
வெள்ளமும் மழையும்தான்
யோசிக்கப்படுகிறதா?
சுனாமி வந்த கடற்கரையெல்லாம்
காலம் ஆன பிறகு
அலையோடு ஆலோசிக்கும்போது
எப்போதோ வந்த வெள்ளம்
எதற்காக சிந்தனையில்?.
முதன்முறையாய்
அணை திறந்து
நதி கரை உரசுவதை பார்ப்பதற்கும்,
வெள்ளம் அடித்து முடித்தபின்
பாதிப்பை கேட்பதற்கும்,
மட்டுமே சென்ற
பார்வையாளர்களால்
பாதிப்புக்கு விலை சொல்லவும்
வார்த்தை நிவாரணமும்
மட்டுமே கொடுக்க முடியும்.
கடவுள் விட்ட சாபம்
மனிதன் தவறு செய்வது.
கடவுள் கொடுத்த வரம்
மனிதனை தவறை திருத்த செய்வது.
தவறு நடந்து விட்டது.
திருத்திக்கொள்ளலாமே?
மனிதர்கள் தானே நாமும்.
ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்.
அங்கங்கே தேங்கி இருக்கும்,
அந்த பழைய உணர்வுத் தேக்கங்களை
ஒன்று திரட்டி
நதியையும் கரையையும்
வறட்சியையும் மீறி
ஒன்று சேர்க்க
சுற்றி இருக்கும் மரங்களெல்லாம்
பொய்க்காமல் பெய்யட்டும்
மற்றும் ஒரு முயற்சி மழை.
No comments:
Post a Comment