Tuesday, March 11, 2008

குஷி

இவன்..,
பாடலை கேட்டதோடு மட்டுமில்லாமல்
பாடகியையும் ரசித்தவன்.

அர்த்த ராத்திரியில்
அமுக்கு பிசாசிடம் மாட்டிக்கொண்டவன்.

கண்ணாடி போன்ற நட்பில்
கல்லெறிந்து விட்டாயே என்றதில் கடுப்பானவன்.

உணர்ச்சி வசப்பட்டதில்
வசமாக மாட்டிக்கொண்டவன்.

சூரி சொல்லு சூரி சொல்லு என்பதற்கு
ப்பூரி என்று சொல்லி பூரித்தவன்.

தளர்ந்து போன தந்தையை
தோள் மேல் கை போட்டு அழைத்துச் செல்பவன்.

தன்னுடைய அழுகைக்கு காரணம்
தான்தான் என்று சொல்லி சிரித்துக் கொள்பவன்.

கல்லூரி வளாகத்துக்குள் காலப்போக்கில்
குடும்பமாய் வாழ்ந்தவன்.

நன்றி இல்லாத நண்பர்கள் என்று சொல்லி
நன்றிக்காக நாய் வளர்த்தவன்.

தன்னை நோக்கி எறியப்படும் வார்த்தை பந்துகளை
தடுத்து நிறுத்தி ஓட்டம் எடுப்பதில் ஆட்ட நாயகன்.

கோபத்தில் மலையேறுவதில் முருகனாகி
மன்னிப்பில் மண்டியிடுவதில் மரியாளாகியவன்.

திருமணத்தில் ஆசீர்வாதத்தை எதிர்பார்க்காமல்
ஆசீர்வாத - திருமணத்தையே மணந்துகொண்டவன்.

எங்கேயோ பரமத்தியில் பிறந்த இவனுக்கும்
எங்கேயோ பரதேசத்தில் வளர்ந்த அவளுக்கும்தான்
ஆண்டவன் எழுதி வைத்திருக்கிறான்.
இவங்கதான் கல்யாணம் பண்ணிக்க போறாங்க.
எப்படி கல்யாணம் பண்ணிக்க போறாங்க?.
வாருங்கள், திரைப்படத்திற்கு, குஷியாய்.

வகுப்பறை திரையரங்கத்துக்குள்,
வானவில் நிறங்கள்
ஒவ்வொன்றும்
ஒரு நுழைவுச்சீட்டை வாங்கி
ஓரமாய் ஒருங்கே அமர்கிறார்கள்.

கரும்பலகை திரையில்
வெள்ளெழுத்துக்களாய் ஆசிரியர்
பெயர்ப்பலகை எழுத
ஆரம்பித்தது திரைப்படம்.

நாயகன் நாயகி - திரையிலில்லை.
எங்களோடு திரைக்கு முன்னால்.

திரைப்படம் ஆரம்பித்து
சிறிது நேரம்
நாயகனும் நாயகியும் சந்திக்கவில்லை.

நாயகன் எங்களோடு சிரிக்கிறான்.
நாயகி ஏங்கலாக பார்க்கிறாள்.

சிறிது நேரத்தில்
இரட்டையாய் சிரிப்பு சத்தம்.
இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.
இருவரும் இணைந்து சிரிக்கிறார்கள்.

பெற்றோரின் அழைப்புக்காக
திரையங்கத்திலிருந்து
வெளியேறினான் நாயகன்.

சிறிது கால பிரிவைக்கூட தாங்காமல்
அழைப்பு அனுப்பினாள் நாயகி.

அழைப்பிலிருந்த முடிச்சை
அவனே அவிழ்த்துப்போட
ஆரம்பித்தது வில்லன் காட்சி.

திரும்பி வந்து அமர்ந்தார்கள்.
திரையை போலவே
வாழ்க்கை இருளானதால்
வெளிச்சத்தை தேடி
நிலத்திலே நிழல் விழாத கோவிலில்
கீதம் பாடினார்கள்.

ராகம் ஒன்று சேர்ந்து
பாடல் விமரிசையானது.
இவர்கள் சேர்ந்ததை
மற்றவர்கள் விமர்சிக்கலானது.
சிலருக்கு விசித்திரமாகிப்போனது.

நான்காம் பருவத்தில் நண்பர்களாகி
ஐந்தாம் பருவத்தில் ஐக்கியமாகி
ஆறாம் பருவத்தில் ஒன்றாகி
காதல் பருவத்தில் தேர்ச்சி பெற்றார்கள் .

இணைந்துவிட்டதால்
ஈருடல் ஓருயிர் ஆகிவிட்டதால்
பொதுவான இருக்கையில்
பொதுமக்களோடு அமராமல்
அனுமதியின்றி
அடுத்த வகுப்பில் அமர்ந்தார்கள்.

அவர்கள் அமைதியாயிருந்தாலும்
அருகே அமர்ந்திருந்தவர்களுக்குள் சலசலப்பு.
இப்போதுதான் இடைவேளை.
இவர்களுக்குள் அன்று முதல்
இடைவெளி இல்லாத வேளை.

இரண்டாவது பாதியில்
எதிர்பார்த்தது போல்
எடுத்ததுமே அதிர்ச்சிதான்.

நாயகன் மீது நம்பிக்கையில்லாமல்
அனுமதிச்சீட்டை பரிசோதிக்க
அனுமதி கேட்டு விட்டே வருகிறார்
உரிமையாளர்.

பரிசோதனை அறிந்து
நாயகன் நாயகியை பிரிந்து
நண்பர்களோடு அமர்கிறான்.
உரிமையாளர் சென்றவுடன்
நண்பர்களை பிரிந்து
நாயகன் நாயகியோடு அமர்கிறான்.

திரைப்படத்தில் சண்டை கூட உண்டு.
வில்லனால் அல்ல.
வில்லங்கங்களால்.
இருட்டுக்குள்.
முதல் நாள் நாயகிக்கு அடி.
இரண்டாம் நாள் நாயகனுக்கு அடி.
இப்படி இவர்களுக்குள் அடிக்கடி.

முகம் தேயுமளவுக்கு
முத்தமிட்டுக்கொள்வதிலும்
முகம் வீங்குமளவுக்கு
யுத்தமிட்டுக்கொள்வதிலும்
காதலும் மோதலும்
கலந்திருந்தன காட்சிகளில்.

உரிமையாளரின்
ஒவ்வொரு வருகையும்
அவரின் சந்தேகத்தை
ஊர்சிதபடுத்தியது
பரிசோதிக்க வ்ந்தவர்
பரிதவிக்கிறார்.
வேடிக்கையான முயற்சிகளானாலும்
வெற்றி பெறாமல் போனதால்
வெடிக்கிறார்.
வேடிக்கை பார்த்தார்கள்,
வேடிக்கையாய் பார்த்தார்கள்,
வருத்தத்துடனும் பார்த்தார்கள் பொதுமக்கள்.

இடைஞ்சல்களுக்கு மத்தியிலும்
இவர்கள்
கடற்கரைக்கும் பாறைக்கூரைக்கும்
கடந்து சென்று
காதல் கீதம் பாடினார்கள்.
கதையோடு ஒட்டாத இந்த பாடல்கள்
காத்திருந்த ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

வெற்றியை நிர்ணயிக்கும்
தேர்வுக் காட்சிகளை கூட
தவற விட்ட நாயகனை அழைத்து,
தவறென்று கூற
தான் நாயகன் என்று ஆர்ப்பரித்து
அடுத்த காட்சியில் வெற்றி பெற்று
ஆரவாரங்களை அள்ளிக் கொள்கிறான்.

இரட்டை வேடத்தில் இரு தோழிகள்.
இரட்டை வேஷத்தில் சில தோழர்கள்.
இவர்களால் திரைப்படம் சூடுபிடித்தது.

காதல் முத்திப்போக
காலம் முத்திப்போக
தடைகளை மீறி திருமணம் நடந்தது.
திருமணங்கள் நடந்தது.
ஒரு முறை கரைக்கு அருகில்.
ஒரு முறை கூரைக்கு கீழ்.
ஒரு முறை பாறைக்கு மேல்.

திருமணங்கள் முடிந்தாலும்,
திரைப்படம் முடியும் நேரத்தில்,
அவசியம் புரியாத சில தேடல்களில்
அவசர அவசரமாய் சில இறுதிக்காட்சிகள்.
தேவையில்லாத இட மாற்றங்கள்.

தேடிக்களைத்த பின்
காலாற நடக்க - தன்
கால் சுவடுகளுக்குள் மீண்டும் நடக்கிறான்,
நாயகியோடு கைகோர்த்துக்கொண்டு...
காலம் ஆனதும் - அவர்கள்
கால்தடங்களுக்குள் பிஞ்சுத் தடங்கள்,
காதல் தடங்கல்களை
கலைந்து போகச் செய்யும் வெற்றியின் சின்னமாய்.

அவர்கள் பயணம் ஆரம்பித்து விட்டது.
தூரமாய் நடந்து செல்கிறார்கள்.
திரைப்படம் தொடரும்... என்று முடிகிறது.
பெயர் போடுகிறார்கள்.
அதில் எங்கள் பெயர்களும்.
ஆச்சர்யப்படுகிறோம்.

அரங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்.
திரைப்படம் எப்படி? என கேட்கிறார்கள்.
திரைவிமர்சனக்குழுவினர்.
ஒரு முறை பார்க்கலாம் என்ற
ஒவ்வாத விமர்சனத்தை விட்டு
நல்லாயிருக்கு!!!
நூறு வருஷம் ஓடும் என்கிறோம்.
நடித்த நடிகர்களாய் அல்ல.
ரசித்த ரசிகர்களாய்.....

No comments: