இவன்
உரையாடல்களை
உன்னிப்பாக கவனிப்பவன்.
கூடியிருப்பவர்கள் சிரித்தால்
கூட இருந்து கூத்தடிப்பவன்.
வாடியிருப்பவர்கள் அழுதால்
பாரத்தில் பாதியை சுமப்பவன்.
தானும் அழப்போகிறோம்,
தானும் விழப்போகிறோம் என
தனக்கே தெரியாதவன்.
மனம் போன போக்கில் போன
இவன் வாழ்க்கையில்
மனம்தான் முக்கியம் என்றானது.
தொலைபேசி வலைவீசியதும்,
மலருக்குள் புகுந்த காற்று
மகரந்தத்தோடு வெளிவருவதுபோல,
இவன் காதுக்குள் புகுந்த
வார்த்தைகளெல்லாம்
மனதுக்குள் காதலாக சேர்கிறது.
எப்படி விழுந்தேன் என்பதும்
யாரிடம் விழுந்தேன் என்பதும்
மின்வலையில் அம்பலமானது.
உடைக்க வேண்டிய மலைகளெல்லாம்
ஊதித்தள்ளும் சிலந்தி வலையானது.
மனம்,
வெற்றி அடைந்ததாய் எண்ணி
வானத்தில் அடிக்கடி
உயரத்தில் பறந்தது.
பறந்தபோதெல்லாம்
உயிரை பிரிந்ததாய் வருந்தியது.
இதற்கா வருத்தப்படுகிறான்?
என்பது போல்
எல்லாவற்றுக்கும் வருத்தப்படுகிறது.
தெளிவில்லாத மனம்
துளிதுளியாய் திருத்தப்படுகிறது.
வலுவில்லாத மனம் மெதுவாய்
வலுப்படுத்தப்படுகிறது.
மன வில்லை வளைத்து,
வார்த்தை அம்புகளை
வரிசையாய் தொடுத்து,
இதய நரம்புகளை
வெகுவாய் கிழித்து,
உதிர்ந்த உணர்வுகளை
அள்ளி எடுத்து,
உணர்ச்சி மரத்தின் வேரிலூற்றி
அதை விருட்சமாக்கி,
இதுதான் என் கோவிலென்று
தினமும் தொழுகிறது.
நான் தான் ஆலமரம்,
நீ என் விழுது.
தனி மரம் ஒன்றை
தனியே எப்படி வளர்க்கலாம் என்று
ஆலமரம் ஆடுகிறது.
குலதெய்வம் என்று ஒன்றிருக்க
நிழல் தரும் மரம் கோவிலா? என்று
மௌனமாய் எதிர்க்கிறது.
உடலுக்கு நிழல்தரும்
மரமல்ல அது,
உள்ளத்துக்கு இதம்தரும்
குடை என்கிறான் பக்தன்.
சொல்வதை சொல்லிவிட்டு
சுருட்டிக்கொண்டு நடக்கிறான்.
அடுத்த வார்த்தை மழைக்காக.
சொந்தங்களுக்கு
பத்திரிக்கை அனுப்பி
கும்பாபிஷேகத்துக்கு வரச்சொல்கிறது.
கோவிலில் மாற்றமில்லை என
குலதெய்வத்திடம் சொல்லச்சொல்கிறது.
கும்பாபிஷேகம் நடக்கும்.
கும்பாபிஷேகம் நடக்க வேண்டும்.
குலதெய்வம் வரும்.
குலதெய்வம் வர வேண்டும்.
ஆசீர்வதிக்க வருமா?
வந்துவிட்டோமே என்று ஆசீர்வதிக்குமா?
தரிசிக்க வந்தவர்களுக்கெல்லாம்
தவிர்க்க முடியாத ஒரு பயம்.
மரம் எங்களுக்கு சொந்தம்,
மண் எங்களுக்கு சொந்தம் என்று
உரிமையாளர்கள்
உரக்க குரல் கொடுத்தால்?
நித்தமும்
நீரூற்றியவனுக்கு தெரியாதா?
மரம் யாருக்கு நிழல்தரும் என்று.
முடிவாகட்டும் என்று
வாழ்த்தும் வாய்ப்பிற்காக
பாத சாரிகள்
முடிவோடு காத்திருக்கிறார்கள்.
மரத்து நிழலில் தான்.
குல தெய்வ கோவிலில் அல்ல....
No comments:
Post a Comment