Monday, March 10, 2008

காலச்சுவடுகள்_3

கல்லூரிக்குள் நடந்ததெல்லாம்
மனதுக்குள் கல்வெட்டுகள்.
செதுக்கப்பட்டு சில காலமானாலும்,
சிறிது சிறிதாய்
மனதுக்குள் சிதைந்தாலும்,
சமீப கால விஷயங்களால்
சற்றே மனதில் புதைந்தாலும்,
தொலைந்து போகாத கால வெட்டுகள்.

நினைத்தவுடன்
ஆழ்கடல் மனதுக்குள்ளிருந்து
ஆரவாரமாய்
சிந்தனைக்கு வந்து
சில்லிடவைக்கும்
நீர்க்குமிழிகள்.

அன்று -
உணவை மறந்து
பேசிக்கொண்டிருக்கும்போது
பசி இருந்ததேயில்லை.
வேர்க்க விறுவிறுக்க
விளையாடினாலும்
வலி இருந்ததேயில்லை.
தேர்வுக்கு முதல்நாள் கூட
கூடிச்சிரிக்க மறந்ததேயில்லை.

நிலைத்ததில்லை எந்த சண்டையும்.
நீடித்ததில்லை எந்த நெருடல்களும்.
நீடித்தது எதுவும்
நிலைத்ததில்லை.
நீர்த்து போனது நாளாக நாளாக,..

எத்தனை விஷயங்கள்.
எத்தனை விஷமங்கள்.
எத்தனை வெற்றிகள்.
எத்தனை தோல்விகள்.
எந்த சூழ்நிலையிலும் மறக்காத
அத்தனையும் வைர நிமிடங்கள்.

வாடாத அந்த நினைவுகளுக்கு
வார்த்தை வடிவம் கொடுக்க மனதில்லை.
வேரூன்றிவிட்ட கல்லூரி நிகழ்வுகளை
விளக்க இந்த வேள்விக்கு வாய்ப்பில்லை.

ஆக, - ஆரம்பமே
அன்றைய பிரிவு நாள் தான்.

பிரிகிறோம் பிரிகிறோம் என்று
அழுதோம் அந்த நாள்.
ஓரே ஒரு நாள்.
ஆனால் நாம் பிரிந்ததுமில்லை
பிரிந்ததாய் உணர்ந்ததுமில்லை.

கல்லூரித் தேர்வின்போது,
விரும்பியபடிதான் வினாத்தாள்
வரவேண்டும் என்று
வேண்டிய நமக்கு,
வாழ்க்கை எனும்
விநோதமான வினாத்தாள்
காத்திருப்பது அன்று தெரியவில்லை.

நாளை என்பது என்றுமே
பாரதிதாசன் பல்கழைக்கழக
வினாத்தாள் தான்.
அதிகமாய் படித்தவனுக்கும்,
பழைய வினாத்தாள்களை புரட்டியவனுக்கும்,
கொஞ்சம் எளிதாக இருக்கலாம்.
ஆனாலும்,
நாளை எனும் தேர்வு
கணிக்க முடியாத ஒன்றே!

சிறிய உலகமாயிருந்த நாம்
சிறு சிறு கூட்டமாய் பிரிந்து
அவரவர்க்கென்று
அங்கங்கே ஒர் உலகத்தை கண்டறிந்தோம்.
புது உலகம்
புத்துணர்ச்சியை தந்தாலும்
புதைந்து போன நினைவுகளை
புரையோட செய்யவில்லை.

தனித்திருந்த போதெல்லாம்
மின்காந்த அலைகள்
தொலைவிலிருந்த நம்மை
அலைவரிசையாக்கியது.
மின்வலையில் அனுப்பிய
மின்அஞ்சல்கள் எல்லாம்
நீந்திகொண்டிருக்கும் நினைவுகளை
வலை போட்டு பிடித்தது.

பிச்சையெடுப்பவனுக்கு
இதயத்துடிப்பு
அவன் தட்டில் காசு விழும்
சத்தம் என்றால்,
நமக்கு இதயத்துடிப்பு
மனத்தட்டில் அவ்வப்போது விழும்
கல்லூரி நினைவுகள்தான்.
கல்லூரி நண்பனின் நினைவுகள்தான்.

ஏதாவது ஒரு கல்லூரி கும்பலை
பார்க்கும் போதெல்லாம்
நாங்கள் போடாத ஆட்டமா என்று
பெருமித்துக்கொள்ளும் மனம்.
இப்படியெல்லாம் சந்தோஷிக்கவில்லையே என்று
வருத்தப்படும் குணம்.
ஆட்டம் போடுங்கடா! போடுங்க
வெளியில் வந்தபிறகு தெரியும்
உலகம் எவ்வளவு பெரியதென்று
எகத்தாளமாய் நினைக்கும் குணம்.

நிலவு வெளிச்சத்தின் கீழ்,
தெருவிளக்கு ஒளியில்,
நண்பனின் தோள் சாய்ந்து,
நாக்கு சுட சுட,
பால் அருந்திய அந்த நாட்கள்.
இப்போதும் என்றோ ஒரு நாள் -
தெருக்கடையில் , நள்ளிரவில்
பால் அருந்த நேரும்போது
அந்த நினைவுகள் தான்
அப்போது அருந்தும் பாலைவிட
அதிகமாய் இனிக்கிறது.

நாட்களான பிறகு
நடந்த தவறுகளெல்லாம்
நகைச்சுவையாய் மாறுகிறது.
பட்ட கஷ்டங்களெல்லாம்
புரிதலுக்கென்றே தெரிகிறது.
நடக்காத நல்லவைகளெல்லாம்
நல்லதுக்கென்றே தோன்றுகிறது.
இழந்த விஷயங்களெல்லாம்
இதற்குதானோ என விடை தெரிகிறது.


கடந்து போகிற நிமிடங்களெல்லாம்
கலைந்து போன அந்த நினைவுகளை
கண்களுக்கு காட்டிச் செல்கிறது.
கடந்து போகிற மேகங்களெல்லாம்
வானம் முழுவதும் கலைந்து விட்ட
வானவில்லை வளைக்க சொல்கிறது.
உலகம் முழுவதும்
வியாபித்திருக்கும் இந்த
வானவில்லுக்குள்
வித்தியாசமான
வி விமா நிங்ள்.

விவகாரமான விஷயங்களை
விளையாட்டாக எடுத்துக்கொள்ளும்
கோபக்கார சிகப்பு.
விளையாட்டான விஷயத்தை
விவகாரமாக்கிவிடும்
விவேகமான நீலம்.
எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டியதை
எதுவும் தெரியாதது போல்
மறைக்கும் கறுப்பு.
இதையெல்லாம்
வெளியில் சொல்கிறானே என்பதுபோல்
வெளிப்படையான வெள்ளை.
எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டு
எதற்காகவோ தனக்குள் அழுது கொள்ளும்
பாவமான பச்சை.
எல்லோரையும் குழப்பி விட்டுவிட்டு
தானும் எதற்காகவோ குழம்பி கொள்ளும்
மர்மமான மஞ்சள்.
காதலாகவே இருந்துவிட்டு
காதலே வேண்டாம் என்று
உளறும் ஊதா.
கல்லாகவே இருந்துவிட்டு
காதலும் கஷ்டமும் ஒன்று என்று
அணை போடும் ஆரஞ்சு.

வானத்தில் எங்களை
வானவில்லாய் பார்த்தது போதும்.
வாருங்கள்!!!
வண்ணங்களை கொஞ்சம் நெருங்கி
வருடி பார்ப்போம்.
நெருடலில்லாமல்..,

No comments: