பல்தொழில் படித்து முடித்த
பறவைகள் இரண்டு
ஷண்முகா கல்லூரிவானில்
பறக்க வந்தது.
நட்புப் பசிக்காக
நாளொரு இதய இரையும்
பொழுதொரு மனமுமாக
கூட்டுக்குள் கூட்டம் சேர்த்தது.
சில பறவைகள் தானாகவே
கூடி சேர்ந்தது.
நாளடைவில்
வானம்
வேடந்தாங்கல் ஆனது.
எங்கிருந்தோ எப்படியோ
தோன்றிய நீரெல்லாம்
ஒன்றாய் சேர்ந்து
கடலுக்கு சென்றவுடன்
நீலமாகிப் போவது போல,
எங்கிருந்தோ எப்படியோ
வளர்ந்த நாமெல்லாம்
ஒன்றாய் சேர்ந்து
கல்லூரிக்கு வந்தவுடன்
ஒன்று ஒன்றாய் சேர்ந்து
நீளமாகிப் போனோம்.
கொஞ்சம் கொஞ்சமாய்
ஆழமாகிப் போனோம்.
ஒவ்வொன்றும் ஒரு மாதிரி.
ஒவ்வொன்றும் ஒரு குணம்.
ஒவ்வொன்றும் ஒரு நிறம்.
கல்லூரி வானில் தான்
இந்த வானவில்
முதன்முறையாய்
உலகுக்கு தெரிந்தது.
ஒன்றைவிட மற்றது பெரிது
என்று ஆலோசிக்க,
இணை கோடுகளல்ல
நம் நட்பு.
மையம் மட்டும்
முடிவு செய்யப்பட்டு
ஆரத்தை அவ்வப்போது
அளவில்லாமல்
வளர்த்துக்கொள்ளும் வட்டம்.
இளவட்டம்.
இந்த வட்டத்திற்குள்
சில விட்டங்கள்,
சில சிறிய வட்டங்கள்,
சில தீவுகள்,
சில உருவமில்லா உருவங்கள்.
உள் வட்டங்கள் சுருங்கினாலும்,
விட்டங்கள்
வெளி வட்டம் சுருங்காமல்
பார்த்துக்கொண்டது.
எத்தனை நினைவுகள்?
எத்தனை நிஜங்கள்?
எத்தனை கனவுகள்?
மன நூலகத்தில்
எங்கோ ஒளிந்திருக்கும்
எங்கோ ஒளித்திருக்கும்
கல்லூரி புத்தகத்தை
கொஞ்சம் தூசி தட்டி
படித்துவிட்டு போங்கள்.
எப்படி இருந்தது
அந்த நான்கு வருடங்கள்?
எங்கே இருக்கிறார்கள்
அன்று பார்த்த நூறு உருவங்கள்?
எப்படி போனது
அடுத்த ஐந்து வருடங்கள்?
அமைதியாய் யோசித்து
லேசாக மனசை வருடுங்கள்.
வேகமாய் சென்றிருக்கும்
வாழ்க்கை வாகனத்தை
சற்று ஓரமாய் நிறுத்தி
வந்த பாதையை
சற்றே திரும்பி பாருங்கள்!!!
No comments:
Post a Comment