சிதறடிக்கும் சிரிப்பு
புண்ணாகிற அளவுக்கு புன்னகை
நினைத்தாலே இனிக்கும் நகைச்சுவை.
தவறே சொல்லமுடியாத கோபம்
விட்டுக்கொடுத்து பேசும் விவேகம்
விட்டுக்கொடுக்காமல் விவாதிக்கும் நியாயம்.
விஷமங்கள் செய்யும் குழந்தைதனம்
விளையாட்டில் இருக்கும் மோகம்
மனம் திறந்து பேசும் மன விசாலம்.
பெரிய செலவுகளை மதிக்காத மனம்
பெரியோர்களை மதிக்கும் குணம்
பெற்றோர்களை நண்பர்களாக்கும் கைங்கர்யம்.
எடுத்த விஷயங்களை முடிக்கும் வேகம்
எதிரிகளையும் யோசிக்க வைக்கிற நிதானம்
எதிர்காலத்தை எதிர்நோக்குகிற விதம்.
இவை தான்
இவன் உயரத்தை விட
இவனை அண்ணாந்து பார்க்க வைத்தது.
இவை தான்
இவனது நட்பு நட்சத்திரங்களுக்கு நடுவில்
இவனை நிலாவாக பார்க்க வைத்தது.
முதல் பருவத்தில்
தூக்கி எறிந்த கணக்கை,
முடியும் பருவத்தில்
தூசு தட்டி எடுத்தவன்
எச்சரித்து சென்றதால்
இவனுக்கே பிடிக்காத 'சாமி'யை,
எங்களை - பிடித்து
ஒரு நாள் முழுவதும்
உச்சரிக்க செய்தவன்.
எலி - யை கூட
எலி சாமி என்றழைத்தவன்.
அதிக கருப்பு நானில்லையென
அவனை விட கருப்பாயிருப்பவனிடம்
ஆர்ப்பரித்தவன்.
நண்பனின் கண்கள் இரத்தமாவதை
கண்டுகொள்ளாமல்
மூக்கு பெரியதாகிவிட்டதென
நெஞ்சை நிமிர்த்தி
வாஞ்சையோடு
கொஞ்ச சொல்லுபவன்.
திட்டங்கள் பாழாகும்போதெல்லாம்
திட்டமிட்டவனை
திட்டித் தீர்ப்பவன்.
வருத்தப்படுபவனை
அருகில் கூட்டி
வார்த்தைகளில்
நம்பிக்கையூட்டி
வாழ்க்கைக்கு
தெம்பூட்டுபவன்.
எண்ணங்கள் - வானத்தை போல
எல்லையில்லாமல் இருந்தாலும்
தன்னைச் சுற்றி
வெள்ளை வட்டம் போட்டுக்கொண்ட
கருப்பு நிலா இவன்.
இவன் போட்ட வட்டத்தில்
இவனே சிக்கிக் கொண்ட காலம் அது.
ஆனால்
இரு வட்டத்திற்குள்ளும்
இவன் வெகுநேரம் இருந்ததில்லை.
பகல் வேளைகளில்
கவிதை வார்த்தைகளை
கடன் வாங்கி
காலாட்சேபம் செய்தது நிலா.
தனக்கென
ஒரு நட்சத்திரம் என
ஒரு மனதாய் தத்தளித்தது நிலா.
அமாவாசை இரவில்
தலைநகரம் சென்ற போது
தன்னைப்போல் ஒருவன்
தன் இடத்தில் இருக்க
தவித்து போனது நிலா.
தன்னிடத்தில் என்ன இல்லை யென
துடித்து போனது நிலா.
ஒரு-நட்சத்திரம் அல்ல அது.
எரி நட்சத்திரம் என
எரிந்தது.
எரிந்து விழுந்தது.
பிரிந்தோம்.
பிரிந்து,
பறந்தது இந்த நிலா,
வேறு கண்டத்திற்கு.
வேறு கட்டத்திற்கு.
கற்றவனுக்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
சிரிக்க வைப்பவனுக்கு
சென்ற இடமெல்லாம் நட்பு.
புது நண்பர்கள்
புது நண்பிகள்.
எங்கள் சுற்றங்களிலிருந்து
நகர்ந்து போனது இந்த நிலா.
எங்கள் முற்றங்களிலிருந்து
மறைந்து போனது இந்த நிலா.
மாதம் ஒருமுறை
மறைந்து போகிற நிலா
அ(இ)ப்போதெல்லாம்
வருடம் ஒருமுறைதான்
வந்து போனது.
நிலாவைப் போலவே - மெல்ல
நகர்ந்தது காலம்.
கூடப்பிறந்த அழகை
கட்டிக்கொடுத்து
காத்திருந்தது இந்த நிலா,
தன் பெளர்ணமிக்காக...
இதுநாள் வரை
நிலா முதுகின்
இருட்டில் மறைந்திருந்த
எழில் மிகு நட்சத்திரம்
தொழில் நகரத்தில் இருந்து
வெளிச்சத்திற்கு வந்தது.
விண்ணாட்சி செய்த நிலாவை
மீண்டும் ஆட்சி செய்ய வந்ததொரு
நட்சத்திரம்.
மேகம் பூத்தூவ
வானம் மழை பொழிய
இரு மனமும்
ஒருமனதாய்
திருமணமானது.
மீண்டும்
நகர்ந்து போனது இந்த நிலா.
சூரியன் உதிக்குமிடத்தில்
மறைந்து போனது இந்த நிலா.
காத்திருக்கிறோம்.
உன் வரவுக்காக.
உன்னுடைய புதுவரவுக்காக.
உங்களது
வெள்ளையான பால் நிலாவுக்காக..,
இல்லையேல்,
குட்டி நட்சத்திரத்திற்காக..,
Thursday, January 22, 2009
கருப்பு நிலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment