இவன்
கற்றுத் தெளிந்தவனில்லை.
கண்டு தெளிந்தவன்.
இவன்
பட்டுத் திருந்தியவனில்லை.
பார்த்து - தவறு செய்யாதவன்.
இவன்
விளையாடித் தோற்றவனில்லை.
தோற்றவர்களைப் பார்த்து
விளையாட மறுத்தவன்.
இவன்
கற்க வந்தவர்களை மட்டுமல்ல,
கற்பிக்க வந்தவர்களையும்
நண்பனாக்கியவன்.
இவன்
சுக துக்கங்களை பகிர்பவனில்லை.
சுக துக்கங்களை பகிரச்செய்பவன்.
இவன்
வட்டமிட்டு படிப்பவனையும்
திட்டமிட்டு வெளிக் கொண்டு வருபவன்.
இவன்
பழைய வினாத்தாளை பார்த்ததற்கே
பயந்து போய் 'போகிறவன்'.
இவன்
அதிகம் பேசியது
அவனிடமுமல்ல.
அவளிடமுமல்ல.
'ஆப்கோடு' மட்டும்தான்.
இவன்
அரை மணி நேரம் விழித்திருந்து படிக்க
ஒன்றரை மணி நேரம் நடந்து சென்று
நாலரை பால் சாப்பிட்டு வருபவன்.
இவன்
பத்துக்கு பத்து அறைக்குள்
பத்து பேருடன் தங்கி -
படுத்து உறங்கி வாழ்ந்தவன்.
இவன்
ஆழ்ந்த உறக்கத்திலும்
அரை கண்களை விழித்தே வைத்திருந்து
அறைக்குள் வந்தவனை
ஆராய்ச்சி செய்ய வைப்பவன்.
இவன்
வருகைக்காக காத்திருக்கும்
முதல் வரிசை பெண்கள்.
இவன்
தலைகோதும் நேர்த்திக்காக
காத்திருக்கும்
கடைசி வரிசை கண்கள்.
இவன் -
இவர்கள்
தன் வருகைக்காக காத்திருக்கட்டும் என
தாமதமாய் வருபவன்.
இவன்
இவனுக்கே தெரியாமல்
இருந்த இடத்திலேயே
இருந்து - மதியை மட்டும்
இளக வைத்தவன்.
இவன்
புரியாத மொழிகளிலும்
பிடிக்காத வரிகளிலும் உள்ள
காதல் கடிதங்களை
வாசிக்க மட்டுமே
விருப்பப்படுகிற தபால்காரன்.
அடுத்த நாள் பிரியப்போகிறோம் என்ற
அந்த நாளில்
அனைவரும் அழும்போது கூட
வகுப்பறைக்குள் இருந்துவிட்டோம்
வாழ்க்கையறைக்குள் போகின்றோம்.
அறை பெரியதாககிறதே தவிர
அங்கே பிரியப் போகிறோமா? என
அழுகையை அடக்கி வைத்தவன்.
தோப்பில்
தனிமரமாய்
தானாக வந்து சேர்ந்த
தென்னை மரம்.
அன்னை மரத்திலிருந்து பறித்து
அடுத்த இடத்தில் பதித்த ‘கன்னு’,
ஆளாக வளர்ந்தாலும்
அன்னை மனத்தில் பதிந்த
அன்னையை மனதில் பதிந்த
தென்னை மரம்.
மன அழுத்த அனலில்
நிழலுக்கும் ஒதுங்க முடியாது.
கண்கள் அழும்
கண்ணீர் மழைக்கும் பதுங்க முடியாது.
ஆனாலும்
அனல் பறக்கும் தருணங்களில்
இளநீரை
இதமாக பரிமாறும் மரம்.
தனிமரம் தோப்பாகுமா?
தெரியாது - ஆனால்
தப்பாகாது.
நண்பர்களின் நினைவுகளை
உடலிலிருந்து
உதிர்த்துவிட்டது போல் தெரிந்தாலும்
உள்ளத்தில் வளையங்களாய்
உறைய வைத்திருக்கும் மரம்.
இதன்
அருகில் செல்வது சுலபம்தான்.
ஆனால்
உறைய வைத்த சுவடுகளில்
உள்ளம் எனும் உள்ளங்காலை வைத்து
உயர ஏறுவதுதான் கடினம்.
ஆழமான வேரில்லாத காரணத்தால்
நிலத்தடி நீரில்லாத நேரத்தில்
அருகிலிருந்த நீர் வளங்களில்
அவ்வப்போது கடன் வாங்கி
தேடி வந்தவனுக்கும்
வாடி வந்தவனுக்கும்
இளநீரை
இதமாக பரிமாறும் மரம்.
வேர்களில் சிந்திய
கண்ணீர்த் துளிகளை
காலம் ஆன பிறகு
கள்ளாய் இறக்குமிந்த மரம்.
விதைத்த காலத்திலிருந்து
சிதையும் காலம் வரைக்கும்
விதைத்தவனுக்கும்
சிதைத்தவனுக்கும்
உதவிக் கொண்டேயிருக்கும்
உன்னதமான மரம்.
காலம் உருண்டோடியது.
காதல் உருண்டு வந்தது.
கல்யாண உருவில் வந்தது.
இப்போது,
நிமிர்ந்திருந்த மரம்
வளைய கற்றிருக்கிறது.
ஒடிய ஒடிய
ஓடியிருக்கிறது.
சுருங்க சுருங்க
சுற்றியிருக்கிறது.
ஓலையை வைத்து
ஓலைச்சுவடியில்
காதல் பயில்கிறது.
சாமியா? - என்று
சல சலத்த இவன் - இன்று
சப்தமே இல்லாமல் - இவனிடத்தை
சாமியார் மடமாகியிருக்கிறான்.
கவிதை என்றால்
காத தூரம் ஓடும் கால்கள்,
காலம் வந்ததும்
கவிதை வீட்டில்
காலடி எடுத்து வைத்திருக்கிறது.
ஈடுகட்ட முடியாத உதவிகள் செய்யும்
இவனிடத்தில் இப்போது
வீடு கட்டி வந்திருக்கிறது ஒரு
வெண்புறா.
இவள்
இவன் இளைப்பாறிக்கொள்ள
இவனுக்கு கிடைத்த
இரட்டை வால் குருவி.
இனி இவன்
ராஜ ராஜ சோழன் தான்.
இவனை ஆளும்
காதல் தேசம் கோபிகா தான்.
Sunday, June 28, 2009
சந்தோஷம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment