Thursday, January 22, 2009

நான் கடவுள்

இவன்
வித்தியாசமானவன்.
அத்தியாவசியமானவன்.

அத்தியாவசியமான விஷயங்களையும்,
அவசியமில்லாத விஷமங்களையும்,
அகற்றிவிட்டு
ஆராய்ந்து பார்த்தால் தெரியும் -
இவன்
வித்தியாசமானவன் என்று.

கல்லூரிக்கு
படிக்க வருபவர்கள் உண்டு
'பிடிக்க' வருபவர்கள் உண்டு
பிடிக்காமல் வருபவர்கள் உண்டு
காலத்தை கடத்த வருபவர்கள் உண்டு
எதிர்காலத்தை நடத்த வருபவர்கள் உண்டு
புதிதாய் தெரிந்துகொள்ள வருபவர்கள் உண்டு
புது முகங்களை அறிந்துகொள்ள வருபவர்கள் உண்டு
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
முதலில் காலில் விழ ஒளிந்து வருபவன் இவன்.

பாட்டியை
கிழவி என்றழைப்பவன்
கிழம் என்றழைப்பவன்
ஆயா என்றழைப்பவன்
ஆச்சி என்றழைப்பவன்
ஆத்தா என்றழைப்பவன்
அப்பத்தா என்றழைப்பவன்
அம்மம்மா என்றழைப்பவன்
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
பாட்டியை 'அம்மா' என்றழைப்பவன்.

கடவுளை
வேதம் என நினைப்பவன்
பூதம் என நினைப்பவன்
கல் என நினைப்பவன்
வெல் என நினைப்பவன்
வேல் என நினைப்பவன்
மனசாட்சி என நினைப்பவன்
நீதிபதி என நினைப்பவன்
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
கடவுளை கட்டாயமாய் நினைப்பவன்.

தேர்வின்போது
முதல் நாள் படித்து தேர்ச்சி ஆனவன்
முன்னால் உள்ளவன் படித்ததால் தேர்ச்சி ஆனவன்
முடிந்த வரை எழுதி தேர்ச்சி ஆனவன்
முடியும் வரை எழுதி எழுதி தேர்ச்சி ஆனவன்
திட்டமிட்டு படித்து தேர்ச்சி ஆனவன்
திட்டம் மட்டும் இட்டு தேர்ச்சி ஆனவன்
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
தேர்வின்போது ஆராய்ச்சிக்கான அறிவிருந்தும்
அரியர் வைத்து அதிர்ச்சி ஆனவன்.

இளமையில்
காதல் பிடித்தவன்
காதல் பிடிக்காதவன்
காதலிக்க துடிப்பவன்
காதலித்து துடிப்பவன்
காதலென்று நடித்தவன்
காதலை நடிப்பென்றவன்
காதலை தள்ளிவைப்பவன்
காதலை சேர்த்துவைப்பவன்
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
இளமையில் காதலை கண்டு பயந்தவன் இவன்.

உடற்பயிற்சியை
உடலை குறைப்பதற்காக செய்பவன்
உள்ளதை மறைப்பதற்காக செய்பவன்
உருவத்தை காட்டுவதற்காக செய்பவன்
பருவத்தை காட்டுவதற்காக செய்பவன்
வளையும் தேகத்திற்காக செய்பவன்
வளையாத தோள்களுக்காக செய்பவன்
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
உடற்பயிற்சியை காத்திருக்கும் ஒருத்திக்காக செய்பவன்.

உதவியை
கடமைக்கு செய்பவன்
கைமாறுக்கு செய்பவன்
உறவுக்காக செய்பவன்
வரவுக்காக செய்பவன்
கேட்டதற்காக செய்பவன்
பதிலுக்கு செய்பவன்
வருந்திக்கொண்டே செய்பவன்
இவர்கள்
மத்தியில்
வித்தியாசமாய்
உதவியை உரிமையாய் செய்பவன்.


இந்த
உரிமையான உதவிக்காகவே
இவனை
விறகானாலும் உதவும்
மரத்தோடு ஓப்பிடலாம்.
வித்தியாசமாக.

இருக்கும்வரை
இருப்பதே தெரிவதில்லை.
இல்லாதபோதுதான்
இருக்கும்போது நிரப்பிய இடமும்
இருந்ததால் கிடைத்த நிழலும் தெரிகிறது.

அழைப்பெனும் நீர் ஊற்றாவிட்டாலும்
நட்பெனும் ஆழம் குறையாத
ஆலமரம்.

அடிக்கடி நிழலுக்கு வராவிட்டாலும்
அர்த்தமற்ற கோபத்தில்
கிளைகளை மடக்காத
இலைகளை முடக்காத
தூங்கா முகமுள்ள மரம்.

அலைபாயும் அருகிலுள்ள மரங்களோடு
அசைந்தாடும் போதும்,
அமைதியாய் இலையுதிரும் மரங்களோடு
அமைதியாகும் போதும்,
இயற்கையோடு இணைந்துபோகும்
இயல்பான மரம்.

அடுத்தவன் பாதையில்
அடியோடு விழாமல் -
அவ்வப்போது
அதிகமாய் வளரும் கிளைகளை
அதுவாகவே ஒடித்துக்கொள்ளும்
சாலையோர மரம்.

இலைகள் - கிளைகளை பிரியும்
ஓசை -
ஓய்வெடுத்து உறங்குபவனை
ஒன்றும் செய்து விடக்கூடாதென
யோசிக்கும் மரம்.

பூக்களை தூவினாலும்
கால்கள் பட விழவேண்டுமே தவிர
கண்களில் விழுந்து விடக்கூடாதென
காத்திருக்கும் மரம்.

சாம்பலாகும்வரை
புகைந்து கொண்டிடுக்கும்
கருவேல மரம்.

கடந்து செல்லும்போது
மழை வேண்டாமென ஒதுங்கினாலும்
மழைத்துளிகளை இலைகளில் தேக்கி
துளிகளை தூவி
சில்லிட வைக்கும் மரம்.

பின்குறிப்பு:
இவையனைத்தும்
புயல் அடிக்காத வரை.

காற்றின் வார்த்தைகளுக்கு
கையசைத்தாலும்
காற்று புயலாகும் போது
தன் வேர் ஆழமென்று தெரிந்தால்
அதன் கிளைகள் எட்டும் வரை
ஆட்டம் போட்டு நிற்கும்
ஆங்காரமான மரம்.

தன்னை பாதுகாக்க
உணர்வெனும் தரைக்குள்ளும்,
தன்னை நம்பியுள்ளோரை பாதுகாக்க
வேலையெனும் வானத்தை நோக்கியும்,
தன்னை நண்பனென்பவனை பாதுகாக்க
நட்பெனும் நாலாபுறங்களிலும்,
வளர்ந்துகொண்டேயிருக்கும்,
பசுமையாக படர்ந்துகொண்டேயிருக்கும்
பலாமரம்.

காத்திருக்கிறோம்.
இந்த மரம்,
தன்னை நம்பியுள்ளோரையும்
தன்னை நண்பனென்பவர்களையும்
தன் முன்னே வைத்துக்கொண்டு
தன் 'அம்மா' வையும்
மனம் முன்னே வைத்துக்கொண்டு
ஒளியாமல் வந்து பெரியவர்கள் காலில் விழுந்து
கடமையாய் நினைத்த கடவுளோடும்
பயந்து ஒதுங்கிய காதலோடும்
ஆராய்ச்சி செய்த இல்லற அறிவோடும்
உரிமையாய் உதவி செய்ய வந்தவர்களோடும்
காத்திருந்த ஒருத்தியை
உடற்பயிற்சி செய்த கையோடு

மூன்று கிளைகளோடுள்ள
ஒதிய மரத்திற்கும்
மூன்று முடிச்சுக்காக காத்திருக்கும்
ஒருத்திக்கும்
முடிச்சு போடும் நாளுக்காக..,

கருப்பு நிலா

சிதறடிக்கும் சிரிப்பு
புண்ணாகிற அளவுக்கு புன்னகை
நினைத்தாலே இனிக்கும் நகைச்சுவை.

தவறே சொல்லமுடியாத கோபம்
விட்டுக்கொடுத்து பேசும் விவேகம்
விட்டுக்கொடுக்காமல் விவாதிக்கும் நியாயம்.

விஷமங்கள் செய்யும் குழந்தைதனம்
விளையாட்டில் இருக்கும் மோகம்
மனம் திறந்து பேசும் மன விசாலம்.

பெரிய செலவுகளை மதிக்காத மனம்
பெரியோர்களை மதிக்கும் குணம்
பெற்றோர்களை நண்பர்களாக்கும் கைங்கர்யம்.

எடுத்த விஷயங்களை முடிக்கும் வேகம்
எதிரிகளையும் யோசிக்க வைக்கிற நிதானம்
எதிர்காலத்தை எதிர்நோக்குகிற விதம்.

இவை தான்
இவன் உயரத்தை விட
இவனை அண்ணாந்து பார்க்க வைத்தது.

இவை தான்
இவனது நட்பு நட்சத்திரங்களுக்கு நடுவில்
இவனை நிலாவாக பார்க்க வைத்தது.

முதல் பருவத்தில்
தூக்கி எறிந்த கணக்கை,
முடியும் பருவத்தில்
தூசு தட்டி எடுத்தவன்

எச்சரித்து சென்றதால்
இவனுக்கே பிடிக்காத 'சாமி'யை,
எங்களை - பிடித்து
ஒரு நாள் முழுவதும்
உச்சரிக்க செய்தவன்.

எலி - யை கூட
எலி சாமி என்றழைத்தவன்.

அதிக கருப்பு நானில்லையென
அவனை விட கருப்பாயிருப்பவனிடம்
ஆர்ப்பரித்தவன்.

நண்பனின் கண்கள் இரத்தமாவதை
கண்டுகொள்ளாமல்
மூக்கு பெரியதாகிவிட்டதென
நெஞ்சை நிமிர்த்தி
வாஞ்சையோடு
கொஞ்ச சொல்லுபவன்.

திட்டங்கள் பாழாகும்போதெல்லாம்
திட்டமிட்டவனை
திட்டித் தீர்ப்பவன்.

வருத்தப்படுபவனை
அருகில் கூட்டி
வார்த்தைகளில்
நம்பிக்கையூட்டி
வாழ்க்கைக்கு
தெம்பூட்டுபவன்.

எண்ணங்கள் - வானத்தை போல
எல்லையில்லாமல் இருந்தாலும்
தன்னைச் சுற்றி
வெள்ளை வட்டம் போட்டுக்கொண்ட
கருப்பு நிலா இவன்.

இவன் போட்ட வட்டத்தில்
இவனே சிக்கிக் கொண்ட காலம் அது.

ஆனால்
இரு வட்டத்திற்குள்ளும்
இவன் வெகுநேரம் இருந்ததில்லை.

பகல் வேளைகளில்
கவிதை வார்த்தைகளை
கடன் வாங்கி
காலாட்சேபம் செய்தது நிலா.


தனக்கென
ஒரு நட்சத்திரம் என
ஒரு மனதாய் தத்தளித்தது நிலா.

அமாவாசை இரவில்
தலைநகரம் சென்ற போது
தன்னைப்போல் ஒருவன்
தன் இடத்தில் இருக்க
தவித்து போனது நிலா.
தன்னிடத்தில் என்ன இல்லை யென
துடித்து போனது நிலா.

ஒரு-நட்சத்திரம் அல்ல அது.
எரி நட்சத்திரம் என
எரிந்தது.
எரிந்து விழுந்தது.

பிரிந்தோம்.
பிரிந்து,
பறந்தது இந்த நிலா,
வேறு கண்டத்திற்கு.
வேறு கட்டத்திற்கு.

கற்றவனுக்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
சிரிக்க வைப்பவனுக்கு
சென்ற இடமெல்லாம் நட்பு.

புது நண்பர்கள்
புது நண்பிகள்.

எங்கள் சுற்றங்களிலிருந்து
நகர்ந்து போனது இந்த நிலா.
எங்கள் முற்றங்களிலிருந்து
மறைந்து போனது இந்த நிலா.

மாதம் ஒருமுறை
மறைந்து போகிற நிலா
அ(இ)ப்போதெல்லாம்
வருடம் ஒருமுறைதான்
வந்து போனது.

நிலாவைப் போலவே - மெல்ல
நகர்ந்தது காலம்.

கூடப்பிறந்த அழகை
கட்டிக்கொடுத்து
காத்திருந்தது இந்த நிலா,
தன் பெளர்ணமிக்காக...

இதுநாள் வரை
நிலா முதுகின்
இருட்டில் மறைந்திருந்த
எழில் மிகு நட்சத்திரம்
தொழில் நகரத்தில் இருந்து
வெளிச்சத்திற்கு வந்தது.

விண்ணாட்சி செய்த நிலாவை
மீண்டும் ஆட்சி செய்ய வந்ததொரு
நட்சத்திரம்.

மேகம் பூத்தூவ
வானம் மழை பொழிய
இரு மனமும்
ஒருமனதாய்
திருமணமானது.

மீண்டும்
நகர்ந்து போனது இந்த நிலா.
சூரியன் உதிக்குமிடத்தில்
மறைந்து போனது இந்த நிலா.

காத்திருக்கிறோம்.
உன் வரவுக்காக.
உன்னுடைய புதுவரவுக்காக.
உங்களது
வெள்ளையான பால் நிலாவுக்காக..,
இல்லையேல்,
குட்டி நட்சத்திரத்திற்காக..,